ஓன்லைன் செய்தித் தளங்கள் பதிவு, ஜெராம் சாடுகிறது

 

onlineமலேசியாவிலுள்ள அனைத்து ஓன்லைன் செய்தித் தளங்களும் மலேசிய தொடர்புத்துறை மற்றும் பல்லூடங்கள் ஆணையத்துடன் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற ஆலோசனையை கெராக்கான் மீடியா மெர்டேக்கா (ஜெராம்) சாடியுள்ளது.

ஓன்லைன் செய்தித் தளங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற நிலை மலேசிய ஊடகங்களின் குரலை பலவீனப்படுத்தும் இன்னொரு முயற்சி என்பதை ஜெராம் வலியுறுத்துகிறது.

முதலாவதாக, மலேசியாவிலுள்ள அனைத்து ஊடக நிருவனங்களும் மலேசிய நிருவனங்கள் ஆணையத்துடன் (எம்சிஎம்சி) பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதோடு அந்த ஊடகங்கள் சுதந்திரமாகச் செயல்படுவதைத் தடுக்கும் சட்டங்களும் இவ்வளவு காலமாகப் பின்பற்றப்பட்டுகின்றன என்று ஜெராம் கூறுகிறது.

அனைத்து ஊடகத்தளங்களும் உள்துறை அமைச்சால் பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அரசாங்கத்தால், எம்சிஎம்சி உட்பட, ஊடகத்தளங்கள் விசாரிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்று ஜெராம் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் கூறுகிறது.

ஆகஸ்ட் 28 இல், தொடர்புகள் மற்றும் பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக், அனைத்து மீடியா செய்தித் தளங்களும் எம்சிஎம்சியுடன் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற முன்மொழிதல் குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது என்று கூறியிருந்ததற்கு ஜெராம் இவ்வாறு பதில் அளித்தது.

சிங்கப்பூரில் இது போன்ற கொள்கை அமலில் இருப்பதை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

வலைத்தளம் சுதந்திரமாகச் செயல்படுவதற்கு அரசாங்கம் அளித்துள்ள உத்தரவாதத்தை சுட்டிக் காட்டிய ஜெராம் அது நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று மேலும் கூறுகிறது.