பினாங்கு பிஎன் கூட்டணித் தலைவர் கோ சூ கூன், தம்மை அடுத்து அம்மாநிலக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் ஒருவரைத் தம் கட்சியிலிருந்து நாளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், 13வது பொதுத் தேர்தலிலும் பினாங்கில் பிஎன் கூட்டணிக்கு கெராக்கான் தலைமை ஏற்பதை எல்லாரும் விரும்புகிறார்கள் என்று சொல்வதற்கில்லை.
பினாங்கில் உள்ள ஒரு மலாய் என்ஜிஓ பினாங்கு பிஎன் கூட்டணிக்கு அம்னோதான் தலைமைதாங்க வேண்டும் என்று முன்மொழிந்துள்ளது. அதுதான் மலாய் சமூகத்துக்கு நன்மையாக இருக்குமாம்.
கோ, மாநில பிஎன் தலைமைப் பொறுப்பை இன்னொரு கெராக்கான் தலைவரிடம் ஒப்படைப்பதைத் தடுத்து அம்னோ அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று பினாங்கு மலாய் காங்கிரஸ் (பிஎம்சி) தலைவர் ரஹ்மாட் இஷாக் கூறியுள்ளார்.
“மாநில அரசியல் மாறிவிட்டது. அதனால் கடந்தகாலப் பாரம்பரியத்தை மறப்போம்”, என்று நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது ரஹ்மாட் கூறினார்.
2008பொதுத் தேர்தலின்போது ஏற்பட்ட அரசியல் சுனாமியில் பினாங்கில் பிஎன் கூட்டணியில் 11 சட்டமன்றத் தொகுதிகளைப் பெற்றது அம்னோ மட்டும்தான் என்பதால் எதிர்வரும் தேர்தலில் அம்மாநிலத்தில் பிஎன்னுக்குத் தலைமையேற்கும் பொறுப்பு அதற்கே வழங்கப்பட வேண்டும் என்றாரவர்.
அத்தேர்தலில் கெராக்கானும் மசீசவும் பினாங்கில் ஓர் இடத்தைக்கூட பெற முடியாமல் படுதோல்வி கண்டன.
கெராக்கான் தலைவரான கோ, 18 ஆண்டுகளாக தாம் வகித்துவரும் பினாங்கு பிஎன் தலைவர் பதவியை அடுத்து ஏற்கப்போகின்றவரின் பெயரை நாளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
கூட்டணியின் எல்லா உறுப்புக்கட்சிகளுக்கும் ஏற்புடைய ஒருவரிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்கப்போவதாக அண்மையில் கோ குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், புதிய தலைவரின் பெயரை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இத்தாமதம் ஒருவேளை அவர் அம்னோவின் அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கலாம் என்ற ஆருடங்களுக்கு இடமளித்துள்ளது. அம்னோ, கோவின் அரசியல் செயலாளரும் பினாங்கு கெராக்கான் உதவித் தலைவருமான ஒங் தியான் லையிடம் (வலம்) அப்பொறுப்பை ஒப்படைக்குமாறு நெருக்குதல் கொடுப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால், பினாங்கு கெராக்கான் தலைவர் டாக்டர் டெங் ஹொக் நான் அதனை மறுக்கிறார். பிஎன், அதன் பங்காளிக்கட்சிகளுடன் கூடிப் பேசி முடிவெடுப்பதுதான் வழக்கம் என்கிறாரவர்.
கோவை பொறுத்தவரை, தலைமைப் பொறுப்பைக் கட்சித் தலைமைச் செயலாளர் டெங் சாங் இயோவிடம் (இடம்) ஒப்படைப்பதையே விரும்புவதாகத் தெரிகிறது. அது விசயமாக அவர் டெங்கிடம் இரண்டு தடவை பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது.