பிரதமர்துறை துணை அமைச்சர் எஸ்.கே தேவமணி, இந்தியர்கள் ஏஎஸ்எம், ஏஎஸ்1எம் பங்குகள் வாங்குவதை ஊக்குவிக்காத சில வங்கிகளைச் சாடியுள்ளார்.
“இந்தியர்கள் அப்பங்குகளை வாங்க முற்படும்போது பங்குகள் விற்று முடிந்துவிட்டன என்றும் இன்னும் பல காரணங்களையும் அவர்கள் கூறுகின்றனர்.வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நிரந்தர வைப்புத் தொகை பறிபோய்விடுமோ என்ற பயம் அவர்களுக்கு. இது பற்றி வங்கி மேலாளர்களிடம் பேசியிருக்கிறேன். பெர்மொடாலான் நேசனல் பெர்ஹாட்(பிஎன்பி)-டிடமும் இதைத் தெரியப்படுத்தியுள்ளேன்”, என்று தேவமணி(பிஎன் -கேமரன்) மக்களையில் கேள்வி நேரத்தின்போது கூறினார்.
இந்தியர்கள் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட யுனிட் டிரஸ்ட் பங்குகளை வாங்குவதற்கு வங்கியில் வைத்துள்ள நிரந்தர வைப்புத்தொகைகளை மீட்டுக்கொள்வார்கள் என்று அந்த வங்கிகள் அஞ்சுவதாக துணை அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனால் இழப்பு இந்தியர்களுக்குத்தான் என்று தேவமணி கூறினார். நிரந்தர வைப்புத் தொகைகளுக்கு 2.5 விழுக்காடு வட்டிதான் கிடைக்கிறது ஆனால், சில யுனிட் டிரஸ்ட்கள் 6.5 விழுக்காடு லாப ஈவு வழங்குகின்றன.
பின்னர்,மக்களவைக்கு வெளியில் செய்தியாளர்கள் தேவமணியைச் சந்தித்தபோது, பிஎன்பி வங்கிகளைக் கண்காணிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்தியர்களுகாக ஒதுக்கப்பட்ட யுனிட் டிரஸ்ட் பங்குகள் இந்தியர் சமூகத்துக்குச் சென்றடைவதை உறுதிப்படுத்தும் முக்கிய பொறுப்பு அவற்றுக்கு உண்டு என்றாரவர்.
இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட யுனிட் ட்ரஸ்ட் பங்குகளில் ரிம420மில்லியன் பெறுமதியுள்ள பங்குகள் இன்னும் வாங்கப்படாமல் உள்ளன.