போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதி நில பேரம் தொடர்பில் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அல்லது மற்ற அமைச்சர்களிடமிருந்து எந்தப் புகாரையும் போலீஸ் பெறவில்லை.
1999ம் ஆண்டு தொடக்கம் 2002ம் ஆண்டு வரையில் அத்தகைய புகார்கள் எதுவுமில்லை என கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று, போலீஸ் புலனாய்வு அதிகாரி ஆர் ராஜகோபால் தெரிவித்தார்.
பிரதிவாதித் தரப்பு வழக்குரைஞர் வோங் கியான் கியோங் குறுக்கு விசாரணை செய்த போது ராஜகோபால் அவ்வாறு கூறினார்.
மகாதீரிடமிருந்து இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதியும் இன்னொரு முன்னாள் பிரதமரான அப்துல்லா அகமட் படாவியிடம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதியும் போலீஸ் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததாகவும் அவர் சொன்னார்.
ஆனால் அவர்கள் என்ன கூறினர் என்பதை ராஜகோபால் தெரிவிக்கவில்லை.
முன்னாள் போக்குவரத்து அமைச்சரும் முன்னாள் மசீச தலைவருமான டாக்டர் லிங் லியோங் சிக் மீதான வழக்கு விசாரணையில் ராஜகோபால் இறுதி அரசு தரப்பு சாட்சி ஆவார்.
போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதித் திட்டத்துக்கு நிலம் கொள்முதல் செய்யப்பட்ட விலை மீது ஆண்டுக்கு 7.5 விழுக்காடு கூடுதல் வட்டி விதிக்கப்படுகிறது என்னும் தகவலை அமைச்சரவைக்குத் தெரிவிக்காததின் மூலம் அமைச்சரவையை ஏமாற்றியதாக 68 வயதான லிங் மீது குற்றம் சாட்டப்படுள்ளது.
வட்டி விகிதம் உட்பட ஒரு சதுர அடிக்கு 25 ரிங்கிட் என்னும் அடிப்படையில் சொத்து மதிப்பீட்டுச் சேவைத் துறை அந்த நிலத்தின் மதிப்பை 1,088,456,000 ரிங்கிட் என நிர்ணயம் செய்திருந்தது.
புத்ராஜெயாவில் பெர்டானா புத்ரா கட்டிடத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தின் நான்காவது மாடியில் அந்தக் குற்றங்கள் புரியப்பட்டதாக கூறப்பட்டது.