பாஸ்: கியாட்மாரா விநியோகிப்பாளர்களுக்குக் கூடுதலாக ரிம 1 மில்லியன் கொடுக்கப்பட்டதை விசாரியுங்கள்

அரசாங்கப் பயிற்சி நிறுவனமான கியாட்மாரா, கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றாமல் விநியோகிப்பாளர்களுக்கு கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ரிங்கிட் கூடுதலாக கொடுத்து விட்டதாகக் கூறப்படுவது மீது அதனை எம் ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க வேண்டும் என பாஸ் விரும்புகிறது.

“மோசடிகள் நிகழ்ந்துள்ளதற்குத் தெளிவான அறிகுறிகள் உள்ளன. பொருள்களுக்கான முறையான விலைகளை முன்னதாகப் பெறாமலும் ( quotations ), விலைகளை கொள்முதல் அதிகாரி சோதனை செய்யாமலும் சாதனம் வாங்கப்பட்டுள்ளது,” என பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் அயூப் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

கிராமப்புற, வட்டார மேம்பாட்டு அமைச்சிடமிருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு தமக்குக் கிடைத்த அறிக்கையின் படி கியாட்மாரா நிறுவன அளவில் எந்த உள் நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆனால் தலைமை கணக்காய்வாளர் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள தவறுகளை கியாட்மாரா ஒப்புக் கொண்டுள்ளது என சலாஹுடின் சொன்னார்.

அதிகமாக கொடுக்கப்பட்ட பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளும் கடுமையான கடிதம் விநியோகிப்பாளருக்கு கொடுக்கப்பட்டது மட்டுமே ஒரே நடவடிக்கை ஆகும் எனவும் அந்த அறிக்கை கூறியது.

கியாட்மாரா, தொழில் ரீதியாகவும் முறையாகவும் இயங்கவில்லை என்று குற்றம் சாட்டிய சலாஹுடின், அமைச்சும் நிறுவனமும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியிருப்பதால் தாம் அது குறித்து மேல் நடவடிக்கைக்காக எம்ஏசிசி-யிடம் புகார் செய்யப் போவதாகவும் தெரிவித்தார்.