பினாங்கில் கடந்த நவம்பர் 4 மற்றும் 5 இல் ஏற்பட்ட வெள்ளம் ஏழு உயிர்களைப் பலி கொண்டுள்ளது. அந்த வெள்ளம் “கடவுளின் செயல்” என்று ஒரு பாரிசான் நேசனல் பிரதிநிதி இன்று கூறினார்.
இந்த வெள்ளத்திற்கு பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் தொடர்ந்து மற்றவர்களைக் குறைகூறுவதில் தாம் ஏமாற்றம் அடைந்துள்ளதாக முகம்மட் ஃபாரிட் சாட் (பிஎன் – புலாவ பினாங்கு) கூறினார்.
“அதை ஏற்றுக்கொள்ளுங்கள், அது ஒரு கடவுளின் செயல், மற்றவர்களைக்க் குறைகூறாதீர்.
“கெடாவிலிருந்து தண்ணீர் வந்ததற்காக முதலமைச்சர் கெடாவைக் குறைகூறக் கூடாது. அந்தத் தண்ணீரால் செபராங் பிறையின் வடபகுதியில் சில இடங்கள் இன்னும் தண்ணீரில் மூழ்கியுள்ளன”, என்று அவர் கூறினார்.
இதனால் தூண்டப்பட்ட ஆர்எஸ்என் ராயர் (டிஎபி – செரி டெலிமா) “இது கடவுளின் செயல் என்று உங்களுக்கு நிச்சயமாகத் தெரியுமா, இல்லை மேம்பாட்டுத் திட்டமா?’, என்று கேட்டார்.
பதிலளித்த ஃபாரிட், “ஆம், நான் அதை ஒப்புக்கொள்கிறேன் (கடவுள் செயல் என்று)” என்றார்.