கிறிஸ்துவ சமய போதகர்கள் “நற்செய்தியை” பரப்புவதற்கு எட்டு வழிகளைப் பயன்படுத்துவதை ஜயிஸ் எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை கண்டு பிடித்துள்ளது. அவற்றுள் ஒன்று “சூரிய சக்தியில் இயங்கும் கையடக்க பேசும் பைபிள்கள்” ஆகும்.
அந்தத் தகவலை இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் ஹசான் அலி இன்று வெளியிட்டார்.
தனித்து வாழும் தாய்மார்கள், ஏழைகள், முதியவர்கள், மற்றவர்கள் ஆகியோருக்கு நிதி முதலான உதவிகளை வழங்குவதற்கு சமூக நலக் குழுக்களை அமைத்து முஸ்லிம்களை மத மாற்றம் செய்வதற்கு “நற்செய்தியை” பரப்புவதும் மற்ற வழிகளில் அடங்கும் என்றும் அவர் இன்று கூறினார்.
ரொக்கம் கொடுப்பதுடன் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்வது, வர்த்தகம் தொடங்க மூலதன உதவி செய்வது, மற்ற வகைகளிலும் உதவி செய்வது போன்ற வழிகளிலும் கிறிஸ்துவர்கள் இலக்கு வைக்கப்பட்ட பிரிவுகளுக்கு ஊக்கமூட்டுவதாகவும் ஹசான் தெரிவித்தார்.
அவர், சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில் அம்னோவின் சுங்கை பூரோங் உறுப்பினர் முகமட் சம்சுதீன் லியாஸ் தொடுத்த கேள்விக்கு முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையாளருமான ஹசான் பதில் அளித்தார்.
முஸ்லிம்களை கிறிஸ்துவ சமயத்துக்கு மாற்றுவதற்குக் கிறிஸ்துவ மதப் போதகர்கள் முயலுவதாகக் கூறப்படுவது உண்மையா என்றும் அது உண்மை என்றால் எந்த வழிகளில் முயற்சி செய்யப்படுகிறது என்றும் இஸ்லாத்தை விட்டு முஸ்லிம்கள் வெளியேறுவதைத் தடுப்பதற்கு ஜயிஸ் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்றும் முகமட் சம்சுதின் வினவியிருந்தார்.
இலவச டியூசன் வகுப்புக்கள் வழியாகவும் பள்ளிக்குச் செல்லும் முஸ்லிம்களிடையே கிறிஸ்துவ மத போதகர்கள் “தங்களது நம்பிக்கையை மெதுவாகப் பரப்பி வருவதையும்” ஜயிஸ் மேர்கொண்ட ஆய்வு கண்டு பிடித்துள்ளதாகவும் ஹசான் கூறினார்.
அந்த முயற்சிகளுக்கு உதவியாக பொது இடங்கள், வீடுகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் துண்டுப் பிரசுரங்களும் அது போன்ற மற்ற பொருட்களும் விநியோகம் செய்யப்படுகின்றன.
அந்த மதப் போதகர்கள் அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக “சமூக நிலையங்கள்” என்னும் போர்வையில் அமைப்புக்களையும் உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்த ஹசான், அவர்கள் “பைபிளை பாஹாசா மிலாயுவில் மொழி பெயர்த்துள்ளதாகவும்” குறிப்பிட்டார்.
முஸ்லிம்களைக் கிறிஸ்துவர்களாக மாற்றும் முயற்சிகள் நிகழும் இடங்களில் இணையமும் பொதுவாகக் காணப்படுகிறது. பொழுதுபோக்கு, வழிகாட்டி நிகழ்ச்சிகள், வகுப்புக்கள் என்ற போர்வையில் மதப் பிரச்சாரம் நிகழ்கிறது என்றார் அவர்.
அந்த தந்திரங்களை முறியடிக்க, ஜயிஸ், முஸ்லிம் சமூகத்தின் சமய நம்பிக்கையை வலுப்படுத்த செயல் திட்டம் ஒன்றை அமலாக்குவதுடன் போதனை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று ஹசான் தெரிவித்தார். அது தவிர இஸ்லாமிய கோட்பாடுகள், ஷாரியா சட்டங்கள், தார்மீகப் பண்புகள் மீது விளக்கக் கூட்டங்களையும் அது நடத்தும்.
கிறிஸ்துவ சமயமும் மற்ற சமயங்களும் மேற்கொள்ளும் பிரச்சாரத்தினால் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிப்பதற்கு ஜயிஸ், ஊடகங்கள் வழியாகவும் முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் அவர் சொன்னார்.
அதே வேளையில் 1988ம் ஆண்டுக்கான இஸ்லாம் அல்லாத சமயங்கள் ( முஸ்லிம்களிடையே பிரச்சாரம் செய்வதைக் கட்டுப்படுத்துவது) சட்டத்தையும் 1995ம் ஆண்டுக்கான ஷாரிய கிரிமினல் குற்றச் சட்டத்தையும் அமலாக்குவதை ஜயிஸ் வலுப்படுத்தும்.