சட்டத்தை மீறும் மத்திய அரசாங்கத்தைத் தண்டிப்பது யார்?, சார்ல்ஸ் சந்தியாகோ

அண்மையில், 2012 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவு திட்டத்தில் முன்மொழிந்திருந்தவாறு, சிலாங்கூரில் உள்ள எல்லா பள்ளி மாணவர்களுக்கும் கடந்த ஓரிரு நாட்களாக  ரிம100 உதவி தொகை வழங்கப் பட்டு வருவதை அறிந்து தாம் அதிர்ச்சி அடைந்துள்ளதாக டிஎபி கிள்ளான் நாடாளுமன்ற  உறுப்பினர்  சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்

“பள்ளி மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்க முன்வந்துள்ள மத்திய அரசாங்கத்தை நான் பாராட்டுகிறேன். அவர்களின் செயலையும் ஊக்குவிக்கிறேன். ஆனால், என்னை  வியக்கவும், சிந்திக்கவும் வைக்கும் செயலும்  அதேதான்”, என்றாரவர்.

தற்போது, 2012 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீதான  விவாதம் இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், முன்மொழியப்பட்டுள்ள இத்திட்டத்தை நாடாளுமன்ற மக்களவை கூட்டமும், மேலவை கூட்டமும் (மேலவைக் கூட்டம் இன்னும் நடைபெறவில்லை) இன்னும் அங்கீகாரிக்காத நிலையில், இத்திட்டம் அமல்படுத்தப்படுவது சட்டத்தை மீறுகின்ற செயலாகும் என சார்ல்ஸ் சாடினார்.

அரசமைப்புச் சட்டங்களை மத்திய அரசாங்கம் மீறுகின்றது எனச் சாடிய சார்லஸ்,  கணக்கு வழக்கு காட்ட வேண்டிய மக்களின் பணத்தை அரசியல் காரணத்திற்கு பயன்படுத்த எவருக்கும் அதிகாரம் இல்லை என்றார்.

மேலும், மேலவையின்  அங்கீகாரம் பெறாமல் அவசரப்பட்டு இந்நிதி வழங்கும் அரசாங்கத்தை அவர் வன்மையாகக் கண்டித்தார்.

பள்ளியில் பயிலும் எல்லா மாணவர்களுக்கும் ரிம100 வழங்கும் செயல் ஆக்ககரமற்ற செயல் எனக் கூறிய அவர், இப்பணம் ஏழை பிள்ளைகளுக்கும் ஏழை குடும்பங்களின் சுமையைக் குறைக்கும் உதவியாக இருக்க வேண்டுமே தவிர நல்ல வசதி படைத்த பணக்கார வீட்டு பிள்ளைகளுக்கும் கொடுத்து அரசாங்கம் ஏன் பண விரயம் செய்கின்றது என்பதுதான் கேள்வி என்றார்.

“மத்திய அரசாங்கம் பள்ளி மாணவர்களுக்கு பண உதவி வழங்குவதை மக்கள் கூட்டணி தடுக்க வில்லை. அரசியலமைப்பு சட்டத்தை  மீறும் செயலைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம்”, என அச்செய்தியாளர் கூட்டத்தில் இருந்த கிள்ளான் நகராண்மைக் கழக உறுப்பினர் யூவ் பூன் லாய் கூறினார்.

இத்தகையச் செயல் அரசமைப்புச் சட்டத்தை நாம் மீறலாம் என அரசாங்கமே கூறுவது போல் உள்ளது என்று கூறிய ராஜூ வீராசாமி, இவர்களின் செயல் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு தங்களது விருப்பம் போல் செய்துக் கொண்டிருப்பதை மிக தெளிவாக நாம் பார்க்க முடிகிறது என அவர் மேலும் கூறினார்.

மற்றொரு கிள்ளான் நகராண்மைக் கழக உறுப்பினரான நலன், அரசாங்கத்தின் இத்தகையச் செயல் மற்றவர்களை பண மோசடி செய்ய தூண்டும் வகையில் உள்ளது என்றார்.

தீபாவளி மாதம் தொடங்கி, இன்று வரையில் சமூக நல உதவி பெரும் பல ஏழை மக்கள், தங்களுக்குக் கிடைக்க வேண்டிய பண உதவி கிடைக்கவில்லை என்றும், கிடைக்க வேண்டிய தொகையில் சிறு தொகை மட்டுமே வழங்கப் படுகிறது என்றும் புகார் செய்த வண்ணம் உள்ளனர். இத்தருவாயில் பணவுதவி எவருக்கு தேவைப் படுகின்றது? மக்களின் பணத்தை ஏன் விரயம் செய்கின்றது மத்திய அரசாங்கம்? சட்டத்தை மீறும் இந்த மத்திய அரசாங்கத்தை யார் தண்டிப்பது? என வினவிய சார்ல்ஸ், மக்கள் இதைச் சிந்தித்து பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

“இது உங்கள் உரிமை. உங்கள் உரிமைகளைப் பறிக்க விடாதீர்”, என அவர் மேலும் கூறினார்.

TAGS: