முஸ்லிம்களை மதம் மாற்றம் செய்வதற்கு கிறிஸ்துவர்கள் எட்டு வழிகளைப் பயன்படுத்துவதாக கூறிக் கொள்வதைக் காட்டிலும் மதம் மாறியதாக சொல்லப்படும் எட்டு முஸ்லிம்கள் இருப்பதற்கான ஆதாரங்களைக் காட்டுவது நல்லது என கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் சமய விவகாரங்களுக்குப் பொறுப்பான சிலாங்கூர் மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் ஹசான் அலிக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.
“கடந்த சில மாதங்களாக விதி விலக்குப் பெற்றவரைப் போல அந்த மனிதர் இயங்குவது எனக்கு வியப்பைத் தருகிறது- அதாவது தங்கள் சமயம் கிறிஸ்துவர்களினால் கீழறுப்புச் செய்யப்படும் அபாயத்தை எதிர்நோக்குவதாக கூறி முஸ்லிம்களிடையே அச்ச உணர்வை அவர் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார்”, என மலாக்கா-ஜோகூர் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவருமான அவர் சொன்னார்.
சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில் நேற்று முஸ்லிம்களை கிறிஸ்துவர்கள் மதம் மாற்றம் செய்வதாக கூறப்படுவது மீது அம்னோ உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ஹசான் அளித்த பதில் மீது ஆயர் பால் தான் கருத்துரைத்தார்.
“ஹசான் அலி சொன்ன பதில், ஆதாரத்துக்குப் பதில் வெறும் அனுமானத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது மிகவும் கவலையைத் தருகிறது”, என்றும் அவர் சொன்னார்.
“கிறிஸ்துவர்களைத் தாக்கும் நடவடிக்கை கடந்த மே மாதம்-இஸ்லாத்தை அதிகாரத்துவச் சமயம் என்ற நிலையிலிருந்து இறக்குவதற்கு பினாங்கில் சதித் திட்டம் வகுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்படதிலிருந்து தொடங்கியது. ஆகஸ்ட் மாதம் டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் மையம் மீதான சர்ச்சை உருவானது. இது வரையில் எல்லாம் கதையாகவே இருக்கிறது. புகைதான் காணப்படுகிறது. நெருப்பே இல்லை. உண்மைகள் இல்லை”, என அந்த ஆயர் சொன்னார்..
“கிறிஸ்துவர்கள் சதி செய்கின்றனர் அல்லது மதம் மாற்றுகின்றனர் போன்ற கூற்றுக்களுக்கு ஆதரவாக இது வரை எந்த உருப்படியான ஆதாரமும் கொடுக்கப்படவில்லை. ஆனால் அத்தகைய கூற்றுக்கள் நிஜத்தைப் போல தொடருகின்றன”, என அவர் வருத்தமுடன் சொன்னார்.
தொழில்நுட்ப ஆற்றலைக் கொண்டவர்கள்
கிறிஸ்துவர்கள் சமயத்தைப் பரப்புவதற்கு சூரிய சக்தியில் இயங்கும் கையடக்க பேசும் பைபிள்களை பயன்படுத்துவதாக ஹசான் கூறுவதை கேட்டுத் தாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக அந்த கத்தோலிக்க ஆயர் சொன்னார்.
“கிறிஸ்துவர்கள் தொழில்நுட்ப ஆற்றலைப் பெற்றுள்ளதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். ஆனால் அவர்கள் அந்த சாதனத்தை முஸ்லிம்களுடைய சமய நம்பிக்கையைக் கீழறுப்புச் செய்வதற்குப் பயன்படுத்துகின்றனர் எனக் கூறுவதை நான் நம்பவில்லை,” என்றார் அவர்.
“முஸ்லிம்களுடைய சமய நம்பிக்கை அவ்வளவு பலவீனமானது என்று ஏன் ஹசான் நினைக்கிறார்? என அந்த ஆயர் புன்முறுவலுடன் வினவினார்.