தமிழ்ப்பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் இரு மொழி பாடத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் பொதுமக்களிடையே குறிப்பாக தமிழ்ப்பள்ளிகளுக்கு தம் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோரிடையே இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் நான்கு இளைஞர்கள் மலேசியத் தமிழ் இயக்கங்களின் பேராதரவோடு நடைப்பயணத்தை கடந்த 25-11-2017இல் ஜொகூர், ஸ்கூடாய் துன் அமீனா தமிழ்ப்பள்ளி வளாகத்திலிருந்து தொடங்கினர்.
இன்று வரையில் 200 கிலோமீட்டரை தாண்டியிருப்பவர்கள், வரும் 11-12-2017ல் புத்திரா ஜெயாவில் நிறைவு செய்யவிருக்கும் அதேவேளை, அதே நாளில், இந்த இருமொழிக் கல்விக் கொள்கைக்கு எதிரான பரிந்துரையை தமிழ்ப் பெற்றோர் சார்பில் பிரதமரிடம் வழங்கவும் சம்பந்தப்பட்ட நாலவரும் திட்டமிட்டு இருக்கின்றனர்.
இந்த நடைப்பயணத்தில் தியாகு லோகநாதன், தமிழ் இனியன் பஞ்சு, கௌதமன் வாமனா, அஞ்சாதத் தமிழன் ஆகிய நான்கு இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் வகையில், கடந்த 1-12-2017 வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணியளவில் ஜொகூர் சிகாமட் நகரில், மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத் தலைவர் நாக பஞ்சு தலைமையில், கழக ஆலோசகர் இரெ.சு.முத்தையா, கழகப் பொருளாளர் தமிழ் முல்லை பஞ்சு, பொதுக்குழு உறுப்பினர் கமலா தேவி ஆகியோர் சந்தித்து, தங்களின் தார்மீக ஆதரவைத் தெரிவித்துக் கொண்டனதுடன் நடைப்பயணம் மேற்கொண்டவர்களின் நோக்கம் வெற்றி பெறவும் வாழ்த்தினர்.
சம்பந்தப்பட்ட சமூக ஆர்வலர்கள் நால்வரும் சனிக்கிழமை காலையில் சிகாமட்டிலிருந்து கிம்மாஸ் வந்தடைந்தவர்கள், இன்று தங்களின் நடைப் பயணத்தை கெமென்சே நோக்கி தொடர்ந்தனர். தமிழ்க்கல்வி, தமிழ்ப்பள்ளிகளின் கட்டமைப்பையும் நிலைத்தன்மையையும் இலக்காகக் கொண்டு நடைப்பயணம் மேற்கொண்டுள்ள நால்வரும் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்து மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் விடைபெற்றனர்.
கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் இந்த உன்னத நோக்கம் கொண்ட நடை பயணத்தின் நேரடி பகிர்வுகளை சுமார் 140,000-க்கும் அதிகமானோர் கண்ணுற்றுள்ளதாவும் ஆதரவு நல்கி உள்ளதாகவும் இந்த நடைபயணத்தின் பொருப்பாளர்களில் ஒருவரான தமிழ் இனியன் செம்பருத்தியிடம் தெரிவித்தார்.