அஸ்ரி: சூரிய சக்தியில் இயங்கும் பேசும் பைபிள்கள் இருப்பதாக கூறுவது முஸ்லிம்களை அவமானப்படுத்துவதாகும்

முஸ்லிம்கள் “சூரிய சக்தியில் இயங்கும் கையடக்க பேசும் பைபிள்கள்” என்னும் கருவி மூலம் மதம் மாற்றம் செய்யப்படுவதாக சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் ஹசான் அலி கூறிக் கொள்வது ஒர் அவமானம் என முன்னாள் பெர்லிஸ் முப்தி முகமட் அஸ்ரி ஜைனுல் அபிடின் கூறுகிறார்.

“பைபிளை வாசிக்கும் அந்தக் கருவி காரணமாக முஸ்லிம்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினர் என திடீரென விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அது முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் அவமானமாகும்.”

“நீண்ட காலமாக திருக்குர் ஆனை செவிமடுத்து வந்த முஸ்லிம்கள் பைபிளை செவிமடுத்த பின்னர் மாறுகின்றனர் என்ற தோற்றத்தை அது தருகிறது.

“பைபிள், திருக்குர் ஆனைக் காட்டிலும் மிகப் பெரியது என்ற எண்ணத்தையும் அது கொடுக்கிறது”, என அஸ்ரி இன்று விடுத்த அறிக்கை கூறியது.

மலேசியாவில் திருக்குர் ஆன் ஒலிபெருக்கிகள், வானொலி, தொலைக்காட்சி வழியாகவும் அரசாங்க நிகழ்வுகளிலும் திருக்குர் ஆன் பரப்பப்படுகிறது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

“ஆனால் திருக்குர் ஆன்  ஒதப்படுவதை அன்றாடம் கேட்கும் முஸ்லிம் அல்லாதார் முஸ்லிம்களாக மாறியதாக நாம் கேள்விப்பட்டதே இல்லை.”

கிறிஸ்துவ சமய போதகர்கள் “நற்செய்தியை” பரப்புவதற்கு எட்டு வழிகளைப் பயன்படுத்துவதை ஜயிஸ் எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை கண்டு பிடித்துள்ளது. அவற்றுள் ஒன்று  “சூரிய சக்தியில் இயங்கும் கையடக்க பேசும் பைபிள்கள்” என நேற்று ஹசான் தகவல் வெளியிட்டார்.

தனித்து வாழும் தாய்மார்கள், ஏழைகள், முதியவர்கள், மற்றவர்கள் ஆகியோருக்கு நிதி முதலான உதவிகளை வழங்குவதற்கு சமூக நலக் குழுக்களை அமைத்து முஸ்லிம்களை மத மாற்றம் செய்வதற்கு “நற்செய்தியை” பரப்புவதும் மற்ற வழிகளில் அடங்கும் என அவர் தெரிவித்தார்.

“நாமும் அதனைச் செய்யலாமே?

ஹசானுடைய கருத்துக்கள் அதுவும் தொழில்நுட்ப கால கட்டத்தில் வாழ்கின்ற ஆட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் அவ்வாறு சொல்லியிருப்பது தேவையற்ற விஷயம் என அஸ்ரி வலியுறுத்தினார்.

“நமது முஸ்லிம் சகோதரர்களுக்கு இலவசமாக அத்தகைய கருவிகளையும் மற்ற உதவிகளையும் கிறிஸ்துவர்கள் கொடுக்கின்றனர் என்பது உண்மையானால் அதை விட பயனுள்ளதை ஹசான் செய்யலாம் என நான் யோசனை கூறுகிறேன்.”

“திருக்குர் ஆன் வாசகங்களையும் அதன் மொழியாக்கத்தையும் விவேகமான இஸ்லாமிய போதனைகளையும் உள்ளடக்கிய அது போன்ற கருவிகளை அல்லது அதனை விட உயர்ந்த தொழில்நுட்ப கருவிகளை வழங்குவதின் மூலம் நாம் அதனைச் செய்யலாம்”, என்றார் அஸ்ரி.

என்றாலும் அந்தக் கருவி முதலில் ஜயிஸ் அங்கீகாரத்தைப் பெற வேண்டும். அனுமதி இல்லாமல் இஸ்லாமிய சமய போதனைகளை நிகழ்த்தியதாக அவர் மீதும் மற்ற பல சமய பிரமுகர்கள் மீதும் குற்றம் சாட்டுவதற்கு ஜயிஸ் எடுத்த நடவடிக்கை குறித்து அஸ்ரி அவ்வாறு சுட்டிக் காட்டினார் என்பது தெளிவாகும்.