அரசாங்கம் வழங்கிய மில்லியன் கணக்கான கடன் குறித்து சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் தேசிய விலங்குக்கூட நிறுவனம் (NFC) அளித்த விளக்கம் வழங்கப்பட்ட ரிம250 மில்லியன் கடன் அல்ல, அது மானியம் என்று வாதிக்கும் பிகேஆரின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாகத் தெரிகிறது.
பிகேஆரின் வியூகப் பிரிவு தலைவர் ரபிஸி ரமலியின் கூற்றுப்படி இது மானியம் ஏனென்றால் என்எப்சியின் நிருவாகத் தலைவர் முகம்மட் சாலே இஸ்மாயில் வெளியிட்ட தகவலில் அக்கடனைத் திருப்பிக் கட்டுவதற்கான அட்டவணை ஏதும் இல்லை.
“(பிகேஆர் தலைமைச் செயலாளர்) சைப்புடின் நசுதியன், அக்கடன் திருப்பிக் கட்டுவதற்கான அட்டவனையும் இல்லை, வட்டியும் கட்டப்படவில்லை என்பதை வெளிப்படுத்தினார். இன்றைய பெரித்தா ஹரியான் செய்தியில் இதை என்எப்சி உறுதிப்படுத்தியுள்ளது.
“ஆக, இது ஒரு கடன் என்று கூறப்பட்டாலும், ரிம250 மில்லியன் ஒரு மானியம்தான், ஏனென்றால் கடனாக இருந்தால் அதற்கு ஈடாக பிணையம், வட்டி மற்றும் திரும்பக் கட்டும் அட்டவணை ஆகியவை உள்ளடங்கியிருக்கும்…ரிம250 மில்லியனை நாம் திரும்பப் பெற முடியுமா என்பது தெரியவில்லை”, என்று ரபிஸி கூறினார்.
நேற்று நடந்த என்எப்சி செய்தியாளர் கூட்டத்தில் “அந்த ஒப்பந்த நிபந்தனைகளில் திருப்பிக் கட்டுவதற்கான அட்டவணை ஒரு கூறாக இல்லாததால்” அந்நிறுவனம் எந்த ஒப்பந்தத்தையும் மீறவில்லை என்று முகமட் சாலே கூறியதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
“ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு” பின்னர் அது திருப்பிக் கொடுக்க வேண்டியுள்ளது. அந்த நிர்ணயிக்கப்பட்ட நேரம் இன்னும் காலாவதியாகவில்லை என்று அந்நாளிதழ் கூறியது.
“ஒன்றல்ல, இரண்டு கொண்டோ”
பிகேஆர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் எதனையும் முகமட் சாலே மறுக்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்டிய ரபிஸி, மாறாக அந்நிறுவனம் அளித்தத் தகவல் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற பிகேஆரின் குற்றச்சாட்டுகளுக்கு வலிமையூட்டியுள்ளது என்றாரவர்.
“(என்எப்சி) ஒரு சொகுசு கொண்டோ வாங்கியதற்கு ரிம9.8 மில்லியன் செலவிடவில்லை. இரண்டு கொண்டோவுக்கு ரிம13.8 மில்லியன் செலவிட்டது…ஒவ்வொன்றின் விலை ரிம6.9 மில்லியன்.
“மோசடியை மறுக்காமல் ஒன்றல்ல இரண்டு சொகுசு கொண்டோக்கள் அவர்களுக்கு இருப்பதாக இறுமாப்புடன் கூறிய என்எப்சியின் துணிச்சல் என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளது”, என்று அவர் மேலும் கூறினார்.
அமைச்சர் ஷாரிஸாட்டின் சொந்தச் செலவுகளையும் என்எப்சி ஏற்றுக்கொண்டுள்ளது என்ற பிகேஆரின் குற்றச்சாட்டை அந்நிறுவனம் மறுக்கவில்லை என்று அவர் மேலும் கூறினார்.
இந்த விவகாரத்தில் என்எப்சியை தீவிரமாக ஆதரித்த அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜாமாலுடன் டிசம்பர் 12 இல் பொதுவிவாதம் நடத்த தம்மை அழைக்கக் கோரும் கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பியுள்ளதாக ரபிஸி கூறினார்.
பிகேஆர் சுமத்திய ஒன்பது குற்றச்சாட்டுகளுக்கான ஒன்பது பதில்களை பெரித்தா ஹரியான் மற்றும் நியு ஸ்டிரேட்ஸ் டைம்ஸ் நாளிதழ்கள் வெளியிட்டிருந்தன.
“இவற்றுக்கு பதில் அளிப்பதற்காக திங்கள்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்திற்கு நாங்கள் ஏற்பாடு செய்கிறோம். அவர்களின் பதிலை ஆய்வதற்கு இரண்டு நாள் அவகாசம் கொடுங்கள்”, என்று ரபிஸி கூறினார்.