கந்தசாமி : கோமாளி, சாமிவேலுக்கு பின் வந்த பழனிவேலால், ம.இ.கா-வின் தனது இழந்த பலத்தை மீட்க முடியுமா?
கோமாளி : “நாய் சாப் கின்னஸ் ஸ்டவுட், இழந்த பலத்தை மீட்டுத் தருவது” என்ற மலேசியாவின் அப்போதைய தமிழ் சிகப்பு அலவரிசையில் விளம்பரம் இவர்களுக்கு இப்போது பயன் அளிக்கும் என்ற அளவில் இவர்களின் கட்சி அரசியல் உள்ளது, கந்தசாமி.
மலாயா மத்திய இந்தியர் சங்கம், ம.இ.கா-வாக உருவாகியபோது அது தேசியவாதத் தன்மை கொண்ட பணக்கார மற்றும் மத்திய தர மக்களை கொண்டிருந்தது. சாமிவேலுவின் காலக்கட்டத்தில்தான் அது பெரும்பாலான சாதாரண மக்களையும் அரவணைக்கும் கட்சியாக மாறியது. ம.இ.கா மிகவும் பலம் வாய்ந்த கட்சியாக திகழ்ந்த காலக்கட்டத்தில்தான் இந்தியர்களின் உரிமைகளும் பறிக்கப்பட்டன.
சாமிவேலுவின் இரும்புப் பிடியால் அரசாங்கத்தின் கேந்திரங்களின் ஒத்துழைப்போடு தமிழ்ப்பள்ளிகளும், கோயில்களும், சமூக அமைப்புகளும், வாணிபம் மற்றும் பொருளாதாரம், கல்வி இப்படி அனைத்தும் ம.இ.காவினர் கட்டுப்பாட்டில் அல்லது ஆதரவில் இயங்கின. காரணம் இந்தியர்களை ம.இ.கா மட்டுமே பிரதிநிதிக்க இயலும், இந்தியர்களின் பிரச்னைகளை தீர்க்க இயலும் என்ற மாயைதான்.
அம்னோ அரசாங்கம் அந்தத் சூழலை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு, மலேசியா என்ற செல்வம் கொழிக்கும் நாட்டை போதுமான அரசமைப்பு சட்ட மாற்றங்களின் வழியும் கொள்கை மாற்றம் வழியும் தன் வசப்படுத்திக்கொண்டது.
ஒருபுறம் பகடைக்காய்களாக மக்கள் நகர்த்தப்பட்டனர், மறுபுரம் ம.இ.கா என்பது பணம் சம்பாதிக்கும் இடைத்தரகராக அரசாங்க பதவிகளில் இந்தியர்களின் பிரதிநிதியாக இயங்கியது. நகரண்மைக்கழக உறுப்பினர் முதல் அமைச்சர் வரை இவர்கள் தங்களை உரிமை அரசியல் அற்ற நிலையில், அம்னோவின் அரசியல் அடிமைகளாகவே செயல்பட்டனர்.
நவம்பர் 25, 2007-ம் ஆண்டிக்கு பிறகு மக்களிடையே உண்டான மாற்றம் உண்மையானது. மக்கள் அடிப்படை தேவைகளையும் உரிமைகளையும் பேசுகிறார்கள். இதை உணராத ம.இ.கா, தனது கொள்கையை மறுபரிசீலனை செய்யத்தவறிவிட்டது. கொள்கை அளவிலான மாற்றங்களை கோராமல், திரும்பவும் இந்தியர்களை கையேந்தும் பட்டாளமாகவே பார்க்கிறது. அம்னோவும் அதைத்தான் விரும்புகிறது.
ம.இ.காவிடம் இருக்கும் ஒரே பலம், எதிர்க்கட்சிகளின் தன்மைதான். அதன் மாபெரும் பலவீனம் அம்னோவோடு ஒத்துப்போவதுதான். அம்னோவை எதிர்க்கும் எதிர்கட்சிகளை எதிர்ப்பதும், அம்னோவோடு ஒத்துப்போவதும் இந்திய சமூதாயத்திற்குப் பயனளிக்காது.
ம.இ.கா-வின் மீது மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டுமானால் அது தீவிரமான செயல் வடிவங்களை முன்வைக்க வேண்டும். அப்படி செய்வதற்கான உணர்வு கொண்டவர்களை ம.இ.கா இழந்து விட்டதாகவே தெரிகிறது.
எனவே, கந்தசாமி அந்நிலையில் அது இழந்த பலத்தை திரும்பபெற, முதலில் சொன்ன விளம்பரம் மட்டுமே உகந்தது. நன்றாக குரைப்பதற்கு உதவும்.