“நான் நொடித்துப் போயிருந்தேன் ஆனால் பணத்துக்காக பிகேஆர் -லிருந்து விலகவில்லை”

பணத்துக்காக தாம் பிகேஆர் -லிருந்து விலகியதாக அந்தக் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் சையட் ஹுசேன் அலி கூறியிருப்பதை அதன் முன்னாள் இளைஞர் தலைவர் எஸாம் முகமட் நூர் மறுத்துள்ளார்.

சையட் ஹுசேன் வெளியிட்டுள்ள “ஒர் அரசியல் போராளியின் நினைவுகள்” என்னும் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்களுக்கு எஸாம் பதில் அளித்தார்.

2007ம் ஆண்டு அந்தப் புத்தக ஆசிரியருடன் நடத்தப்பட்ட உரையாடல்கள் பொருத்தமற்ற முறையில் புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

பெட்டாலிங் ஜெயாவில் தாங்கள் அடிக்கடி செல்லும் இந்தியர் உணவு விடுதி ஒன்றில் அந்த உரையாடல் நிகழ்ந்ததாக எஸாம் மேலும் தெரிவித்தார். அங்கு நாங்கள் கட்சி விவகாரங்களை விவாதிப்பது வழக்கம் என்றார் அவர்.

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் குறித்தும் அப்போதைய உதவித் தலைவர் அஸ்மின் அலி குறித்தும் சையட் ஹுசேன் அப்போது குறை கூறியதாக அஸ்மின் தெரிவித்தார்.

“இடச்சாரிப் போக்குடையவர் என்ற முறையில் அன்வார், அஸ்மின் ஆகியோருடைய ஆடம்பரமான வாழ்க்கை முறை குறித்து சையட் ஹுசேன் அடிக்கடி தமது ஏமாற்றத்தைத் தெரிவித்து வந்துள்ளார். மாறுபாடாக உள்ள என்னுடைய வாழ்க்கை முறையை அவர்களுடைய வாழ்க்கை முறையுடன் ஒப்பீடும் செய்தார்.

“அப்போதுதான் நான், எனக்கும் பிரச்னைகள் இருப்பதை அவரிடம் தெரிவித்தேன். நான் கட்சியில் இருந்தேன். ஆனால் நான் என் மனைவியின் சம்பளத்தை நம்பியிருந்தேன்.  இந்தோனிசியாவில் இருந்த என் வர்த்தகம் பிரச்னைகளை எதிர்நோக்கியது. இறுதியில் அது மூடப்பட்டு விட்டது.”

“நான் அந்த சூழ்நிலையில்தான் அந்த விவரங்களைத் தெரிவித்தேன். கட்சியை விட்டு விலகுவது என்னும் அடிப்படையில் நான் அதனைச் சொல்லவில்லை”, என நேற்று எஸாம் மலேசியாகினியிடம் கூறினார்.

அம்னோவில் மீண்டும் இணைந்ததும் செனட்டராக நியமிக்கப்பட்டார்

கட்சியிலிருந்து தாம் விலகுவதற்கு அன்வார் தலைமைத்துவமே காரணம் என்பதை தாம் சையட் ஹுசேனிடம் தெளிவாகக் கூறி விட்டதாக அவர் சொன்னார்.

2007ம் ஆண்டு எஸாம் பிகேஆர்-லிருந்து விலகி அம்னோவில் சேர்ந்தார். அதற்கு ஒர் ஆண்டு கழித்து அவர் செனட்டராக நியமிக்கப்பட்டார்.

 எஸாம், தமது பணப் பிரச்னை காரணமாக தாம் கட்சியிலிருந்து விலகி ஒன்றிரண்டு நிறுவனங்களில் இயக்குநர் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டதாக சையட் ஹுசேன் அந்த புத்தகத்தில் எழுதியுள்ளார்.

தாம் கட்சியை விட்டு விலகிய பின்னர் கெராக் என்னும் புதிய அரசு சாரா ஊழல் எதிர்ப்பு அமைப்புக்கு தலைமை தாங்கியதை சையட் ஹுசேன் குறிப்பிட மறந்து விட்டதாக எஸாம் சொன்னார்.

அந்த அமைப்பு கூட்டரசு அரசாங்கத்துக்கு எதிரான பல விஷயங்கள் மீது போராட்டம் நடத்தியது. கெராக் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக ஊழல் தடுப்பு நிறுவனத்தின் தலைமை இயக்குநர் சுல்கிப்லி மாட் நூர் பதவி துறந்தார் என்றும் எஸாம் கூறிக் கொண்டார்.

“ஒருவர் பணத்துக்காகவும் பெரிய நிறுவனங்களில் இயக்குநர் பதவிகளுக்காகவும் கட்சியை விட்டு விலகி அப்போதைய அரசாங்கத்தையும் ஊழல் தடுப்பு நிறுவனத்தையும் தாக்கினார் என எப்படிக் கூற முடியும்?”  என்றும் அவர் வினவினார்.