பள்ளி மாணவர்களுக்கு ரிம100 உதவித்தொகை வழங்கும் நிகழ்வின்வழி அரசாங்கம் அரசியல் ஆதாயம் தேடிக்கொள்ளப் பார்க்கிறது என மாற்றரசுக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அந்நிகழ்வுகளில் பிஎன் பிரதிநிதிகள் அல்லது தலைவர்கள் உடன் இருக்க வேண்டும் என்று அரசாங்கம் பணித்திருப்பதே இதற்குச் சான்று.
இது, அரசாங்கம் நேர்மையற்றது என்பதைக் காண்பிக்கிறது. பொதுமக்களின் பணத்தைப் பயன்படுத்தி அது அரசியல் ஆதாயம் தேடிக்கொள்ள முனைகிறது என்று மாற்றரசுக் கட்சித் தலைவர்கள் சாடியுள்ளனர்.
“இது, மாணவர்கள் அல்லது அவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதைவிடவும் அம்னோ அல்லது பிஎன்தான் பணத்தைக் கொடுப்பதாகக் காட்டிக்கொண்டு அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேடுவதையே நோக்கமாகக் கொண்டிருப்பதைக் காண்பிக்கிறது”, என்று பாஸ் உதவித் தலைவர் மாவுஸ் ஒமார்(இடம்) கூறினார்.
இதற்குக் கல்வித் தலைமைச் செயலாளர் ரோஸ்லி முகம்மட் பள்ளி நிர்வாகிகளுக்கும் மாநிலக் கல்வித்துறை இயக்குனர்களுக்கும் நவம்பர் 11-இல் அனுப்பிவைத்த கடிதமே சான்று என்றாரவர்.
அந்த உதவித்தொகையை வழங்குவதில் மக்கள் பிரதிநிதிகள் அல்லது “மத்திய அரசின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்” உதவியாக இருக்க வேண்டும் என்று அக்டோபர் 28-இல் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக அக்கடித்ததில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், 2012 பட்ஜெட்டைத் தாக்கல் செய்தபோது மாணவர்களின் சுமையைக் குறைக்க ரிம550மில்லியன் ஒதுக்கப்பட்டு அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரிம100 உதவித் தொகை கொடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
‘அமைச்சும் அரசியல்கருவியாகப் பயன்படுத்தப்பட்டது’
பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன், “கல்வி அமைச்சை அரசியல் கருவியாகப் பயன்படுத்திக்கொண்ட” ரோஸ்லியைக் கண்டித்தார்.
அவரும் மாவுசும், அரசு ஊழியர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாக இருத்தல் வேண்டும் என்று கூறியதுடன் ரோஸ்லியின் செயல் அரசு ஊழியர்களின் நெறிமுறைகளை மீறிவிட்டதாகவும் சாடினர்.
“இந்த விவகாரத்தை (உதவித் தொகை வழங்குவதை) பள்ளிகளிடமே விட்டிருக்க வேண்டும். ஏதோ அவர்களின்மீது நம்பிக்கை இல்லாததுபோல் நடந்துகொண்டிருக்கிறார்கள்.” பள்ளிகளுக்கு உத்தரவிட்டுக் கடிதம் அனுப்பியதே ஓர் “அவமதிக்கும்” செயலாகும்.
“அது, தலைமைச் செயலாளரின் தோற்றத்தையே களங்கப்படுத்தி விட்டது”, என்று மாவுஸ் கூறினார்.