மலேசியப் பொருளாதாரம் இவ்வாண்டு மூன்றாவது கால் பகுதியில் 5.8% வளர்ச்சியை அனுபவித்தது. இது கடந்த ஒராண்டில் மிகவும் அதிகமான வளர்ச்சியாகும். உள்நாட்டுச் செலவுகள் அதிகரித்ததால் தேவைகள் வலுவடைந்தது அதற்குக் காரணம் ஆகும். இவ்வாறு மத்தியப் வங்கியான பாங்க் நெகாரா கூறுகிறது.
சூழ்நிலகள் சவால் நிறைந்ததாக இருந்தாலும் மலேசியப் பொருளாதாரம் உயர்வான வளர்ச்சியைப் பதிவு செய்தது என பாங்க் நெகாரா கவர்னர் ஜெட்டி அக்டார் அஜிஸ் தெரிவித்தார்.
சென்ற ஆண்டு அதே மூன்றாவது கால் பகுதியில் பதிவான 4.3 விழுக்காடு வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் அது நல்ல முன்னேற்றம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குடும்பச் செலவுகளும் வர்த்தகச் செலவுகளும் அரசாங்கச் செலவுகளும் அதிகரித்தது உள்நாட்டுத் தேவை ‘வலுவாக’ இருப்பதற்கு உதவியது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான உந்துசக்தியாக உள்நாட்டுத் தேவை இருந்து வரும் என்றும் ஜெட்டி சொன்னார்.
இவ்வாண்டு முழுமைக்கும் ஐந்து விழுக்காடு ஏற்றத்தை மலேசியா எதிர்பார்க்கிறது. ஆனால் 2011ல் 4.68 விழுக்காடு வளர்ச்சியையும் 2012ல் 4.5 விழுக்காடு வளர்ச்சியையும் நாடு பதிவு செய்யும் என ஆய்வாளர்கள் ஆரூடம் கூறியுள்ளனர்.
பயனீட்டாளர் தேவை வலுவாக இருப்பதால் இவ்வாண்டு முழுவதும் பொருளாதாரம் வலிமையாக இருக்கும் என்று ராம் ஹோல்டிங்ஸிம் தலைமைப் பொருளாதார நிபுணர் இயா கிம் லெங் கூறினார்.
“பொருளாதாரம் மூன்றாவது காலாண்டில் எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் வலிமையாக இருந்ததால் இவ்வாண்டு முழுமைக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி ஐந்து விழுக்காட்டுக்கு மேல் இருக்கும்.”
“உள்நாட்டுச் செலவுகள் கூடியிருப்பதாலும் முதலீட்டு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாலும் அரசாங்கம் இவ்வாண்டுக்கு ஆரூடம் கூறியுள்ள 5 விழுக்காடு வளர்ச்சியை நாடு பதிவு செய்யும்,” என அவர் ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
இவ்வாண்டு இரண்டாவது கால் பகுதியில் 3.3 விழுக்காடாக இருந்த பண வீக்கம் மூன்றாவது கால் பகுதியில் சிறிதளவு கூடி 3.4 விழுக்காடாக இருந்தது. அதற்கு உணவுப் பொருள் விலைகள் அதிகரித்தது முக்கியக் காரணம் ஆகும்.
ஏஎப்பி