சையட் ஹுசேன்: எஸாம் உண்மையை மறைக்க முயலுகிறார்

பிகேஆர்-லிருந்து தாம் விலகியதற்கான நோக்கத்தை மறைப்பதற்கு எஸாம் முகமட் நூர் முயலுவதாக அந்த கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் சையட் ஹுசேன் அலி கூறுகிறார்.

அந்தக் கட்சியின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவரான எஸாம், பணத்துக்காக கட்சியிலிருந்து விலகினார் என சையட் ஹுசேன் தமது “ஒர் அரசியல் போராளியின் நினைவுகள்” என்னும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு உடனடியாகப் பதில் அளித்த எஸாம், தாம் விலகிய நேரத்தில் நொடித்துப் போயிருந்ததை ஒப்புக் கொண்டார். ஆனால் பணத்துக்காக தாம் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறவில்லை எனச் சொன்னார்.

பெட்டாலிங் ஜெயாவில் தாங்கள் அடிக்கடி செல்லும் இந்தியர் உணவு விடுதி ஒன்றில் அந்த உரையாடல் நிகழ்ந்ததாக எஸாம் மேலும் தெரிவித்தார். அங்கு நாங்கள் கட்சி விவகாரங்களை விவாதிப்பது வழக்கம் என்றார் அவர்.

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் அப்போதைய உதவித் தலைவர் அஸ்மின் அலி ஆகியோரது ஆடம்பர வாழ்க்கை முறையை சையட் ஹுசேன் அப்போது குறை கூறியதாக அஸ்மின் தெரிவித்தார்.

“பொதுவாக நான் ஆடம்பர வாழ்க்கை முறையை குறை கூறுவேன்,” என சையட் ஹுசேன் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

“நாம் மலேசிய சமுதாயத்தில் இல்லாதவர்களுக்காக போராடுகிறோம். அதற்குப் போராடும் நாம் நமது வாழ்க்கை முறைகளில் அடக்கமாக இருக்க வேண்டும்.”

பிகேஆர்-லிருந்து எஸாம் வெளியேறியதற்கான காரணம் பற்றிய முக்கியப் பிரச்னையைத் திசை திருப்ப எஸாம் முயலுவதாக சையட் ஹுசேன் சொன்னார்.

அன்வார் இப்ராஹிம் தலைமைத்துவம் மீது அதிருப்தி அடைந்ததே தாம் கட்சியிலிருந்து  விலகியதற்கு முக்கியக் காரணம் என எஸாம் கூறிக் கொண்டார்.