இருமொழிதிட்டத்தை அகற்றக் கோரி நாடு தழுவிய அளவில் கருத்துக்கணிப்பிலும் பரப்புரையிலும் ஈடுபட்ட நால்வர் தங்களது 17 -நாள் நடைப்பயணத்தை இன்று ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தனர். ஜோகூர் துன் அமினா தமிழ்ப்பள்ளியிலிருந்து கடந்த மாதம் 25-ஆம் தேதி துவங்கப்பட்ட நடைப்பயணம் இன்று புத்ராஜெயாவில் பிரதமர்துறை அலுவலகத்தின் முன் முடிவடைந்தது.
உடல்நிலை பாதிப்படைந்த நிலையில் இருந்தும் இதில் ஈடுபட்ட தியாகுவும் அஞ்சாத்தமிழன் எனப்படும் தச்சாணாமூர்த்தியும் உணர்வுடனும் உச்சாகாத்துடனும் இருந்தனர். அவர்கள் பிரதமர்துறை அலுவலத்தை காலை மணி 9.30க்கு வந்தடைந்த போது அங்கு குழுமியிருந்த ஆதரவாளர்கள் கரவோசை எழுப்பி வரவேற்றனர். சிலர் மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து ஆரத்தழுவி தங்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
“உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்போம். தமிழ் எங்கள் உயிர் என்பதால் அது எங்களது உணர்வாகி இயக்கியது”, என்கிறார்கள் தியாகு த/பெ லோகநாதனும் தச்சாணாமூர்த்தி த/பெ பெருமாள் அவர்களும். இவர்களுடன் இந்த போரட்ட பயணத்தில் ஈடுபட்ட கௌத்தம் த/பெ வமனாவும் தமிழ் இணியன் த/பெ பஞ்சாரணமும் இவர்களுக்கான முழுமையான ஏற்பாட்டையும் பாதுகாப்பையும் கண் இமைபோல் வழங்கியதாக, மருந்தியல் பட்டத்தாரியான தியாகு குறிப்பிட்டார்.
போதுமான உறக்கமின்றி, கிடைக்கும் உணவுடன் பசி தீர்த்து, சாலையோரங்களின் படுத்துறங்கி, அதிகாலையிலே எழுந்து, உடலை வருத்தி இந்த இளைஞர்கள் தமிழ்மொழி நம் நாட்டில் தழைக்க வேண்டும் என்று இப்படி ஒரு தொண்டு செய்வது தமது உடலை சிலிர்க்க வைப்பதாக கூறுகிறார் ஜொகூரில் இருந்து வந்து கலந்து கொண்ட கலாவதி.
இந்த நிகழ்ச்சியின் நோக்கத்தை விளக்கிய மே 19 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளாரும் இந்த நடைப்பயணத்திற்கு துணைநின்றவருமான இரா பாலமுரளி, “இருமொழி திட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஏற்புடையதல்ல, அதை அகற்றாவிட்டால் தமிழ்ப்பள்ளிகளில் இரண்டு வகையான பாதிப்புகள் வரும். முதலாவது அதன் கட்டமைப்பு மாற்றம் காணும், அடுத்தது பெரும்பான்மையான மாணவர்களுக்கான கல்வி பின்தள்ளப்படும்” என்றார்.
மேலும், இது சார்பாக போதுமான சான்றுகளுடன் மூன்று மனுக்களை அரசாங்கத்திடம் வழங்கி விட்டோம், இன்று நான்காவது மனு வழங்கப்படுகிறது என்றார் வழக்கறிஞருமான பாலமுரளி.
சுமார் 10.30 மணியளவில் ஆதரவாளர்கள் சூழ பதாகைகளுடனும் கோசங்களுடனும் பிரமர்துறையின் நுலைவாயிலை நோக்கி கலந்து கொண்ட அனைவரும் அணிவகுத்துச் சென்றனர். அதற்கு துணையாக காவல் துறையினரும் உதவி புரிந்தனர்.
நுலைவாயிலை அடைந்த நிலையில், அனைவரும் தன்னுடன் தமிழுக்காக ஓர் உறுதிமொழியை எடுக்க இயலுமா என்று தியாகு கேட்க, அனைவரும் தயார் என்றனர். வலது கரங்களை நேராக முன்னாள் நீட்டிய வண்ணம், தியாகு சொல்ல, அனைவரும் அதை பின்பற்றி;
“மொழியாகி, எங்கள் மூச்சாகி, நாளை முடிசூடும் எம் தமிழ் மீது உறுதி! வழிகாட்டி எம்மை உருவாக்கும் தமிழர் வரலாற்றின் மீதும் உறுதி! விழிமூடி துயில்கின்ற வீர வேங்கைகள் மீதும் உறுதி! இனிமேலும் ஓயோம்! இழிவாக வாழோம்! உறுதி! உறுதி! வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை! கட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை! வென்றாக வேண்டும் தமிழ், ஒன்றாக வேண்டும் தமிழர்!” என்ற வாசகங்களை உரக்கச் சொன்னார்கள்.
அதைத்தொடந்து தங்களது 17 நாட்கள் அனுபவங்களையும், மக்களுடன் நடத்திய சந்திப்புகளைப் பற்றியும் பகிர்ந்து கொண்டனர். “நமது நாட்டின் தமிழர்களிடையே உயரிய சிந்தனையும் பரந்த மனமும் உள்ளது.”
“இவர்கள் தமிழுக்காக இவ்வளவு தூரம் நடக்கிறாங்க, இவர்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்ற எண்ணத்துல பலர் வந்தனர். ஒரு சிலர் நீண்ட நேரம் அருகிலேயே அமர்ந்து விட்டு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர்கள் கையில் உள்ள சில்லரை பணத்தை எங்களது கையில் திணித்துவிட்டு போகும் போது அவர்கள் பேசாமல் பார்த்த பார்வைகள் எங்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது”, என அவர்கள் கண்ட உருக்கான சூழலை தியாகு பகிர்ந்து கொண்டார்.
தங்களது நடைப்பயணத்தின் போது 91 சந்திப்புகளை நடத்தியதாகவும். அவை தங்களுக்கு ஆழ்ந்த திருப்தியையும் உற்சாகத்தையும் அளித்ததாவும் கூறிய தியாகு, “இந்த நடைப்பயணம் எந்தவொரு தனிமனிர்களின் தேவை அடிப்படையில் அமையாமல், நமது மொழியின் அடிப்படையில் அமைந்ததால் அதன் தாக்கம் ஆழமாக இருந்தது”, என்றார்.
தங்களுக்கு ஆதரவும் உதவியும் நல்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
சுமார், 11.00 மணியளவில், தியாகு, தச்சாணாமூர்த்தி, கௌத்தம் மற்றும் தமிழ் இணியன் ஆகியோர் தமிழ்க்கல்வியின் கட்டமைப்பையும் நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்த கோரியும், இருமொழி திட்டத்தை முற்றாக தமிழ்ப்பள்ளிகளிலிருந்து அகற்றக் கோரியும் தங்களது நடைபயணத்தின் போது பெற்ற கருத்துக்களின் அடிப்படையிலும் ஆய்வுகளின் அடிப்படையிலும் தாயாரிக்கப் பட்ட 110 பக்கங்கள் கொண்ட ஒரு மனுவை பிரதமருக்கு வழங்கினர். அந்த மனுவை பிரமரின் அந்தரங்கச் செயலாளர் நூர் பய்தி பிந்தி அமாட் பெற்றுக்கொண்டார்.
“நூர் அவர்கள், ஏனோதானோ என்று இல்லாமல், மிகவும் ஆவலாக எங்கள் கதையைக் கேட்டதுகூட ஆச்சரியமாகத்தான் இருந்தது, இது சார்பாக தனது கடமையை கண்டிப்பாகச் செய்வாதாக அவர் கூறினார்”, என்றார் கௌத்தம்.
இன்றைய நிகழ்ச்சியை, அதிகாலையிலேயே இவர்களுடன் இணைந்து இறுதிக்கட்ட நடைப்பயணத்தில் கலந்து கொண்ட, வழக்கறிஞர் கா ஆறுமுகம் வழி நடத்தினார். இதில் ரேசு முத்தையா, நாகபஞ்சு, சிலாங்கூர் தமிழ்ச் சங்க தலைவர் இலா சேகரன், தமிழ் அறவாரியத்தின் துணைத்தலைவர் சுப்ரமணியம் மற்றும் வே. இளஞ்செழியன், பினாங்கை சார்ந்த தமிழ்ச்செல்வம், மருத்துவர் செல்வம், சிவா, பந்திங்கை சார்ந்த பராசக்தி, கவுன்சிலர் தீபன், ஜோகூர் முனியாண்டி, பூச்சோங் கந்தசாமி, சிவா, எழுத்தாளர் யுவராஜன், நாம் தமிழர் இயக்கத்தின் கலைமுகிலன், நெகிரி சட்ட மன்ற உறுப்பினர்கள் குணசேகரன் மற்றும் அருள்குமார் ஆகியோர் உட்பட பல ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்
வரலாறு படைத்த இந்த இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். எல்லா தமிழர்களுக்கும் தமிழ் நமது உயிரே. சிலர் அதை மறுப்பது ஏனோ?
செம்பருத்தி இவர்களின் இந்த ந்டை பயணத்தை தொடர்ந்து பகிர்ந்து வந்தமைக்கு வாந்த்துக்கள். உங்களின் உரிமை சார்ந்த பகிர்வுகள் சிறப்பாக உள்ளன். நன்றி
தமிழ் வாழ்க. என் தமிழினம் வாழ்க வாழ்க.