கொடுக்கப்படாத இழப்பீட்டை பெற முன்னாள் பால்மர வெட்டுத் தொழிலாளர்கள் பிரதமரின் உதவியை நாடினர்

 

கெடா, பாடாங் மெகாவிலிருந்து சுமார் 70 முன்னாள் பால்மர வெட்டுத் தொழிலாளர்கள் தங்களுக்கு இன்னும் கொடுக்கப்படாமல் இருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீட்டை பெறுவதற்கு பிரதமரின் உதவியை நாடி அவரது அலுவகத்திற்கு வெளியில் இன்று கூடினர்.

அங்கு கூடியிருந்தவர்கள், பெரும்பாலும் மூத்தகுடிமக்களாகிய மலாய் மற்று இந்திய மாதர்கள், கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் அங்கு காத்திருந்த பின்னர் அரசாங்க அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தலையிடுவதற்கான வாக்குறுதியைப் பெற்றனர்.

இன்று பிரதமர் அலுவலகத்தின் முன்னால் கூடியிருந்த முன்னாள் பால்மர வெட்டுத் தொழிலாளர்கள் 1995 ஆம் ஆண்டில் ஒரு தோட்ட நிறுவனத்திற்கு எதிராக வெற்றிகரமாக தொடுத்திருந்த வழக்கின் 207 வாதிகளில் ஒரு பகுதியினராவர்.

அந்தத் தோட்ட நிறுவனம் 2005 ஆண்டில் திவாலாகிவிட்ட போதிலும், 2011 ஆண்டில் அலோர் செதார் உயர்நீதிமன்றம் வேலையிலிருந்து நீக்கப்பட்டதற்கு இழப்பீடாக அந்த நிறுவனம் ஒவ்வொரு தொழிலாளருக்கும் ரிம22,500 வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது.

அந்த தோட்ட நிறுவனம் அதன் சொத்தை ஒரு மேம்பாட்டு நிறுவனத்திடம் விற்று விட்டது. இந்த மேம்பாட்டு நிறுவனம் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு எந்த இழப்பீடும் வழங்காமல் அனுப்பி விட்டது. பின்னர் அந்த மேம்பாட்டு நிறுவனமும் திவாலாகி விட்டது. திவாலாகி விட்ட சொத்தை நிருவகிப்பவரும் தொழிலாளர்களின் வேண்டுகோளை உதாசீனப்படுத்தி விட்டார் என்று இத்தொழிலாளர்களுடன் பிரதமர் அலுவலகத்திற்குச் சென்ற மலேசிய சோசலிசக் கட்சியின் (பிஎஸ்எம்) மத்தியக் குழு உறுப்பினர் சூ சூன் கை மலேசியாகினியிடம் கூறினார்.

இதன் காரணமாக இந்த முன்னாள் தொழிலாளர்கள் புத்ராஜெயா இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று கோரினர். இறுதியில், மனிதவள அமைச்சின் உயர்மட்ட அதிகாரி இருதரப்பினருக்கும் இடையில் கூட்டம் நடத்துவதற்கு ஒரு நடுவராக செயல்பட உறுதியளித்தார் என்று சூ மேலும் கூறினார்.

இதன் பின்னர், கூடியிருந்த முன்னாள் தொழிலாளர்கள் பிற்பகல் மணி 4 அளவில் கலைந்து சென்றனர்.