மாணவன் அறையப்பட்ட சம்பவம் தொடர்பில் மாணவன் குடும்பத்தார் ச்சேகு அசிசான்மீது வழக்கு தொடர மாட்டார்கள்

ஒரு மாணவனை அறைந்ததாக குற்றம் சாட்டப்பட்ட   ச்சேகு    அசிசான்   என்று    அழைக்கப்படும்   அசிசான் மானாப்    மீது   அவன்  குடும்பத்தார்    வழக்கு   தொடர்வார்கள்   என்று   கூறப்படுவதை    மாணவனின்  தந்தை    மறுத்தார்.

இதற்குமுன்  வந்த   ஒரு    செய்தி,   அசிசான்மீதான   குற்றச்சாட்டுகளை   அரசுத்தரப்பு   கைவிட்டதை     அடுத்து   அவர்மீது    குடும்பத்தார்     வழக்கு    தொடுக்கப்போவதாக   மாணவனின்   தாயார்   தெரிவித்ததாகக்   கூறியது.

ஆனால்,  அதை   மாணவனின்   தந்தை   மறுத்தார்.  நியு  ஸ்ரேய்ட்ஸ்  டைம்சிடம்  பேசிய   அவர்    தம்   மனைவி   சொன்னது   தப்பாக   அறிவிக்கப்பட்டுள்ளது   என்றார்.

“இப்போதைக்கு   சிவில்   வழக்கு   தொடுக்கும்    எண்ணமெல்லாம்  கிடையாது”,  என்றவர்   கூறியதாக   தெரிகிறது.

அசிசான்,44,      அவர்களின்   11வயது  மகனை   அறைந்ததாகக்  குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.

நீலாய்,   எஸ்கே  தாமான்  செமராக்  பள்ளி  மாணவனான   அவன்   பசை  முகர்தல்,  பள்ளிக்கு  மட்டம்  போடுதல்,   மற்ற  மாணவர்களிடம்   அடாவடித்தனம்  செய்தல்   போன்ற   தகாத   செயல்களில்   ஈடுபட்டு  வந்ததால்  அசிசான்  அவனைத்   தண்டித்ததாகக்  கூறப்படுகிறது.

அசிசான்மீது   குற்றவியல் சட்டம்   பகுதி 323 இன் கீழ் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.  இச்சட்டம்   குற்றம்  நிரூபிக்கப்பட்டால்   ஓராண்டு சிறைத்தண்டனை அல்லது ரிம2,000 அபராதம்  விதிக்க   வகை   செய்கிறது.

ஆனால்,  சட்டத்துறைத்  தலைவர்   அலுவலகம்   குற்றச்சாட்டுகளைக்  கைவிட  முடிவு   செய்ததை   அடுத்து  சிரம்பான்  மெஜிஸ்ரேட்    நீதிமன்றம்  நேற்று   அசிசானை  விடுவித்தது.