திங்கள்கிழமை இரவு ஜோகூர் தாமான் பெலாங்கியில் பெட்ரோல் நிலையம் ஒன்றில் 44வயது நிரம்பிய டான் ஏய்க் சாயைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நான்கு பேரில் இருவரை போலீஸ் கைது செய்துள்ளது.
சில வட்டாரங்களை மேற்கோள்காட்டி இச்செய்தியை வெளியிட்டிருக்கும் உத்துசான் மலேசியா, சந்தேகப் பேர்வழிகளின் காரை விரட்டிச் சென்று போலீசார் அவர்களைக் கைது செய்ததாகக் கூறியது.
இதனிடையே மலாய் மெயில் செய்தி ஒன்று மற்ற இரண்டு பேர்வழிகளின் அடையாளம் தெரிந்துள்ளது என்றும் போலீஸ் அவர்களைத் தேடி வருகிறது என்றும் கூறியது.
திங்கள்கிழமை இரவு மணி 7.30க்கு நிகழ்ந்த அச்சம்பவத்தில் அந்த ஆடவரை நால்வர் அடங்கிய ஒரு கும்பல் கத்தியால் குத்தியதுடன் அவர்மீது காரையும் ஏற்றிக் கொடூரமாகக் கொன்றது.
ஜோகூர் பாரு தாமான் பெர்லிங்கைச் சேர்ந்த டான் வட்டிக்குப் பணம் கடனாகக் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். அவர் சம்பவம் நடந்த அன்று தன்னுடைய காருக்குக் காற்று நிரப்புவற்காக அந்த பெட்ரோல் நிலையத்துக்குச் சென்றிருந்தார்.
இரகசிய கும்பல்களுகிடையில் நிகழும் மோதல்களில் இக்கொலை ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என உத்துசான் கூறிற்று.
நேற்று துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, இரு கும்பல்களுக்கிடையிலான கருத்துவேறுபாடுகளால் கொலை நிகழ்ந்திருக்கலாம் என்றார்.