வாங் கெலியான் சம்பவத்தை மூடிமறைத்த அதிகாரிகள்மீது குற்றம்சாட்டப்பட வேண்டும்- எம்பி

கடத்திவரப்பட்டவர்களைத்    தற்காலிகமாக      தங்க  வைப்பதற்கான   இடமாக     செயல்பட்டு    வந்த    வாங்  கெலியான்  முகாம்  குறித்து   2016-இலும்  இவ்வாண்டிலும்  ஒவ்வொரு  நாடாளுமன்றக்  கூட்டத்திலும்    உள்துறை   அமைச்சர்   அஹமட்   ஜாஹிட்  ஹமிடியிடன்  கேள்வி   கேட்டு   வந்திருப்பதாகக்  கூறுகிறார்  கிள்ளான்   டிஏபி  எம்பி  சார்ல்ஸ்   சந்தியாகு.

இது  குறித்து  அஹ்மட்  ஜாஹிட்டிடமிருந்து  திருப்தி  அளிக்கும்  பதில்   வந்ததில்லை   என்றாரவர்.

அங்கு  கண்டுபிடிக்கப்பட்ட    சவக்குழிகள்   தொடர்பில்   12  அதிகாரிகள்   தடுத்து  வைக்கப்பட்டு  பின்னர்   போதுமான   ஆதாரங்கள்   இல்லை   என்று கூறி  விடுவிக்கப்பட்டு   ஆவணங்கள்  ஏதுமற்ற   குடியேறிகள்   நால்வர்  மட்டும்  நீதிமன்றத்தில்   நிறுத்தப்பட்டனர்.

ஆனால்,  அச்சம்பவம்   தொடர்பில்   சந்தியாகு  மனத்தில்   சந்தேகம்  இருந்துகொண்டே  இருந்தது.

”போலீஸ்  மூடிமறைத்த  அச்சம்பவத்தை  நேற்று   த  நியு   ஸ்ரேய்ட்ஸ்    டைம்ஸ்   நாளேடு   அம்பலப்படுத்தியது   என்   சந்தேகத்தை   உறுதிப்படுத்தி   இருக்கிறது”,  என்றாரவார்.

“போலீஸ்  உயர்  அதிகாரிகள்    எதற்காக   அச்சம்பவத்தை   மூடிமறைத்தார்கள்?  யாரை   அவர்கள்   பாதுகாக்க  முயல்கிறார்கள்?”,என்றவர்   வினவினார்.

என்எஸ்டி  சரியான   நேரத்தில்தான்   இதை   அம்பலப்படுத்தியுள்ளது.

வாங்  கெலியான்  சம்பவம்   மூடிமறைக்கப்பட்டதை   விசாரிக்கும்  பொறுப்பை  போலீசிடமே  விட்டுவிடக்  கூடாது.  அவர்கள்   சரியாக  விசாரணை   நடத்துவார்கள்   என்று   நம்ப  முடியாது   என்று  கூறிய   சந்தியாகு   அதை   விசாரிப்பதற்குச்   சுயேச்சை   ஆணையம்  ஒன்று அமைக்கப்பட  வேண்டும்  என்று   வலியுறுத்தினார்.