டாக்டர் மகாதிர் முகம்மட் பேங்க் நெகாராவின் அன்னிய செலாவணி இழப்பு ரிம31.5 பில்லியன் என்று தெரிவித்த அவ்வங்கியின் உதவி கவர்னர் அப்துல் மூராட் காலிட்மீது ஆத்திரப்படுவது முறையல்ல என்கிறார் தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக்.
ஆத்திரப்படுவதாக இருந்தால் முன்னாள் பிரதமர் டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங்மீதுதான் ஆத்திரப்பட வேண்டும் என்றாரவர்.
“மூராட் ஆர்சிஐ (அரச விசாரணை ஆணையம்) -இடம் சாட்சியமளித்தபோது அன்னிய செலாவணியில் ஏற்பட்ட உண்மையான இழப்பு ரிம5.7பில்லியன் அல்ல என்றும் அது ரிம31.5பில்லியன் என்று மட்டுமே கூறினார்.
“ஆனால், கிட் சியாங் இருக்கிறாரே 20 ஆண்டுகளாக பேங்க் நெகராவின் அன்னிய செலாவணி இழப்புகள்மீது ஆர்சிஐ தேவை என்று கோரி வந்துள்ளார்”, என சாலே இன்று தம் வலைப்பதிவில் பதிவிட்டிருந்தார்.
அன்னிய செலாவணி இழப்பு பற்றி அறிந்திருந்த மூராட் இவ்வளவு காலமும் மெளனமாக இருந்துவிட்டு இப்போது அதை வெளியிடுவது ஏன் ஏன்று நேற்று மகாதிர் அவரைச் சாடியிருந்தார்.
அரசியலில் மகாதிருக்கு கிட் சியாங் தேவை என்பதாலும் கிட் சியாங்குக்கு மலாய் வாக்குகளுக்காக மகாதிர் தேவை என்பதாலும் இருவரும் பல்டி அடித்திருக்கிறார்கள் என்று சாலே கூறினார்.
உண்மை தெரிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டவர் கிட் சியாங். உண்மையையே நாடுவதாகக் கூறிக் கொண்டிருந்தவர் மகாதிர்.
இருவருமே இப்போது உண்மையைவிட அரசியல் நலனுக்கே முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்றாரவர்.