இராணுவத்தினர் வாக்குகள் பிஎன்னுக்குச் சாதகமாக இருக்கும் என்றால் தமது தொகுதியான செம்ரோங்கிலும் ஒரு இராணுவ முகாமைக் கட்டப்போவதாக தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கிண்டலடித்ததற்குப் பதிலடியாக ‘ஜோகூரில் அதுதானே ஐயா நடக்கிறது’ என்கிறது டிஏபி.
தமது தொகுதியில் இராணுவ முகாம் கட்டப்படுகிறதா என்பதை யார் வேண்டுமானாலும் வந்து பார்த்துக்கொள்ளலாம் என்று ஹிஷாமுடின் விடுத்த சவாலை ஏற்ற ஜோகூர் டிஏபி தலைவர் லியு சின் தோங், பாலோ சட்டமன்றத் தொகுதியில் ஒரு முகாம் கட்டப்படுவதாகக் கூறினார். பாலோ, செம்ப்ரோங் நாடாளுமன்றத் தொகுதியின்கீழ் வருகிறது.
“குறைந்தது ஆயிரம் படைவீரர்கள் அங்கு அனுப்பப்படுவர் என்பதால் பாலோ வாக்காளர் எண்ணிக்கை 10 விழுக்காடு கூடும்.
“கடந்த பொதுத் தேர்தலில் டிஏபி 103 வாக்குகளில்தான் பாலோவில் தோற்றது. ஹிஷாமுடின் அவரது தொகுதியில் முகாம் கட்டிவருவது உண்மைதான். அதை மறுக்கும் துணிச்சல் அவருக்கு உண்டா?”, என்றவர் வினவினார். குளுவாங் டிஏபி எம்பியான லியு இன்று கோலாலும்பூரில் டிஏபி தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
செப்டம்பர் 27-இல், தற்காப்பு அமைச்சின் முகநூல் பக்கத்தில் நாடு முழுவதும் ஆறு இடங்களில் இராணுவ முகாம்கள் கட்டப்பட்டு வருவதாகவும் அந்த ஆறில் ஒன்று பாலோ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மற்ற முகாம்கள் செகாமாட், ஹுத்தான் மெலிந்தாங், பெரா, கோத்தா பெலுட், ஹஹாட் டத்து ஆகிய இடங்களில் கட்டப்படுகின்றன.
செவ்வாய்கிழமை ஹிஷாமுடின், அரசியல் நோக்கங்களுக்காக இராணுவ முகாம்கள் கட்டப்படுவதாகக் கூறுவதை அபத்தம் என்று சாடியிருந்தார்.