மகாதிர்: ‘உங்கள் எதிரி எங்களுக்கும் எதிரிதான்’ என்று அமெரிக்காவிடம் கூறியதை நஜிப் மீட்டுக்கொள்ள வேண்டும்

பக்கத்தான்  ஹரபான்  தலைவர்   டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  அரசாங்கம்   அமெரிக்க    அதிபர்   டோனல்ட்   ட்ரம்புக்கு   எதிராக   கடைப்பிடிக்கும்   நிலைப்பாடு  அர்த்தமுள்ளதாக   இருத்தல்  வேண்டும்   என  வலியுறுத்தினார்.

.அதில்,  செப்டம்பரில்  அமெரிக்காவுக்கு    அதிகாரப்பூர்வ  வருகை   மேற்கொண்டபோது   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்  ட்ரம்புக்கு   அளித்த  வாக்குறுதியை  மீட்டுக்கொள்வதும்   அடங்கும்   என்றாரவர்.

அப்போது  நஜிப்,  “உங்கள்   எதிரி   எங்களுக்கும்  எதிரியே”  என்று   அமெரிக்க  வலைத்தளமொன்றில்   எழுதிய  கட்டுரையில்   குறிப்பிட்டிருந்தார்.

இன்று   பிற்பகல்,  புத்ரா   ஜெயா  பள்ளிவாசலுக்கு   வெளியில்,   நஜிப்பும்   பாஸ்   தலைவர்     அப்துல்   ஹாடி  ஆவாங்கும்  ட்ரம்ப்   ஜெருசலத்தை  இஸ்ரேலின்   தலைநகராக   அங்கீகரித்ததற்குக்  கண்டனம்   தெரிவிக்கும்   பேரணியில்   கலந்துகொள்ளவிருக்கும்   வேளையில்   மகாதிர்  இவ்வாறு   வலியுறுத்தினார்.

“அம்னோ  பாஸுடன்  இணைந்து   நடத்தும்   ஆர்ப்பாட்டம்    பொருளுள்ளதாக  விளங்க   வேண்டுமானால்  பிஎன்  அரசாங்கம்   ட்ரம்புக்கு   எதிராகவும்   அமெரிக்காவுக்கு   எதிராகவும்   நடவடிக்கை   எடுக்க   வேண்டும்”,  என  வலைப்பதிவு  ஒன்றில்   மகாதிர்   கூறினார்.

இந்த  விவகாரத்தில்  அரசாங்கம்  துருக்கியைப்  பின்பற்றி      பாலஸ்தீனத்துக்கான   மலேசிய   தூதரகத்தை   ஜெருசலத்தில்   நிறுவலாம்.

“எதிரணியைச்  சேர்ந்த   நாங்கள்  நஜிப்   அமெரிக்க   அதிபரைச்  சந்தித்தபோது     அமெரிக்காவின்  எதிரிகள்   மலேசியாவுக்கும்   எதிரிகளே   என்று  ட்ரம்பிடம்  சூளுரைத்ததை   மீட்டுக்கொள்ள   வேண்டும்   என்றும்   கேட்டுக்கொள்கிறோம்”,  என்றாரவர்.

அமெரிக்கா  பாலஸ்தீனத்தைத்   தனது   எதிரியாகக்   கருதுகிறது.  ஆனால்,  பாலஸ்தீனம்  நமக்கு  எதிரி  அல்ல.  இதை   மலேசியா  உலகுக்குத்   தெளிவாக  உணர்த்திட   வேண்டும்   என  மகாதிர்   குறிப்பிட்டார்.

அதேவேளை  ஜெருசலத்தை    பாலஸ்தீனத்   தலைநகராக்குவதை   மலேசியா  ஆதரிப்பதையும்     புலப்படுத்திட   வேண்டும்.