எம்பி: எம்ஏஎச்பி-யை ‘மீட்டெடுக்கவே’ விமான நிலைய வரி அதிகரிப்பு

கோலாலும்பூர்  அனைத்துலக   விமான  நிலையம்2 (கேஎல்ஐஏ2)-இல்  பயணிகள்  சேவைக்  கட்டணம்(பிஎஸ்சி)   கூட்டப்படுவது   விமான  நிலையத்தை   நிர்வகித்துவரும்   மலேசிய  ஏர்போர்ட்ஸ்  ஹோல்டிங்ஸ்  பெர்ஹாட்(எம்ஏஎச்பி)டை  மீட்டெடுக்கத்தான்.

இவ்வாறு   கூறும்     பெட்டாலிங்    ஜெயா   உத்தாரா   எம்பி   டோனி   புவா,  “மிகப்  பெரியதும்  நவீன   வசதிகளைக்  கொண்டதுமான”   கேஎல்ஐஏ2-இன்  பராமரிப்புச்   செலவுகள்  அதிகம்   என்பதால்   பிஎஸ்சி    கட்டணத்தில்  மாற்றமின்றி   அப்படியே  வைத்திருக்க   இயலாது   என்று  மலேசிய   ஆகாயப்  போக்குவரத்து   ஆணையம் (மேவ்கோம்)   கூறியதாக   த  மலேசியன்  இன்சைட்   அறிவித்திருப்பதையும்    சுட்டிக்காட்டுகிறார்.

கேஎல்ஐஏ2   கட்டப்படுவதில்    எம்ஏஎச்பி “பண விரயம்   செய்வது  குறித்தும்  சந்தேகத்துக்கு  உரிய  முறையில்”   முடிவெடுப்பது   குறித்தும்   எதிரணி   அரசாங்கத்தைத்   தொடர்ந்து   எச்சரித்து   வந்துள்ளதைச்   சுட்டிக்காட்டிய   புவா,  மாவ்கோம்  குறிப்பிடுவதுபோல்  “நவீன  வசதிகள்  கொண்ட   விமான  நிலையம்  என்பதால்”  செலவுகள்  கூடவில்லை  என்றார்.

“முதலாவதாக,  எம்ஏஎச்பி   விமான  நிலையத்தைக்  கட்டுவதற்கு    வாங்கிய     ரிம5 பில்லியன்  கடனுக்கு   ஆண்டுதோறும்  ரிம250 மில்லியனுக்குமேல்  வட்டி  செலுத்துகிறது.

“இரண்டாவதாகா,  எம்ஏஎச்பி-இன்  திறமையின்மை   காரணமாகவும்   கேள்விக்குரிய  முடிவுகளின்  காரணமாகவும்   பராமரிப்புச்  செலவுகள்   எதிர்பார்த்ததைவிட    எகிறி  விட்டன”,  என  புவா  ஓர்   அறிக்கையில்   கூறினார்.

கேஎல்ஐஏ-2இல்  தரை  உள்வாங்கும்   பிரச்னை   இன்னமும்  இருக்கிறது.  இதனால்  பல  செளகரிய   குறைவுகள்   ஏற்படுகின்றன.

விமான  நிலையம்   மிகப்   பெரியதாக   இருப்பதால்  விமானப்   பணியாளர்களும்   பயணிகளும்   கூடுதல்   தூரம்   நடந்து   செல்ல   வேண்டியுள்ளது.

“இதன்  காரணமாக   ஏற்கனவே  பொருத்தப்பட்டிருக்கும்   நகரும்   நடைபாதைகளைத்   திருத்தி  அமைக்க   வேண்டியதாயிற்று.  அதுவும்  சரியாக  திருத்தம்  செய்யப்படவில்லை.

“இந்த  இடத்தில்   வேண்டுமானால்   விமான  நிலையம்   பெரிதாக  இருப்பதால்  பராமரிப்புச்  செலவுகள்    கூடிவிட்டதாக   மாவ்கோம்   கூறுவது   சரியாக    இருக்கலாம்.

“என்றாலும்   பிஎஸ்சி  உயர்த்தப்படுவதன்  நோக்கமே    கேஎல்ஐஏ2-க்கு  ஏற்பட்டுள்ள  இழப்புகளை  ஈடு  செய்வதுதான்”,  என்றார்.

எம்ஏஎச்பி   தலைமை   நிதி   அதிகாரி   பொதுக்  கணக்குக்  குழுவிடம்   சாட்சியம்   அளிக்கையில்   ஆதாயம்  காண்பிப்பதற்காக  பிஎஸ்சி-யை  உயர்த்த  வேண்டிய   அவசியமிருக்காது  என்று  கூறியதையும்   நினைவு  கூர்ந்தார்.

“அது  இப்போது  பொய்யாகி   விட்டது.

“பணவீக்க  விகித   உயர்வால்  பிஎஸ்சி   கூட்டப்படுகிறது   என்றால்கூட  மறுப்புச்  சொல்ல  மாட்டோம்.

“ஆனால்,  அனைத்துலகப்  பயணிகளுக்கான   பிஎஸ்சி  கட்டணத்தைக்  கிட்டத்தட்ட   46விழுக்காடு  கூட்டி   ரிம73 ஆக  ஆக்குவதை   ஏற்றுக்கொள்ளவியலாது.    அது   எம்ஏஎச்பி-இன்  முட்டாள்தனங்களுக்கு  மக்களை  விலை  கொடுக்கச்  சொல்வதுபோல்  உள்ளது”,  என்று   புவா  கூறினார்.