நஜிப்: பெல்டா விவகாரத்தில் மோசடி நிகழ்ந்திருந்ததால் நடவடிக்கை

கோலாலும்பூர்,  ஜாலான்  செமராக்கில்  பெல்டாவுக்குச்  சொந்தமான  நில  உரிமை   மாற்றிவிடப்பட்டது   தொடர்பாக   புலனாய்வு   செய்யுமாறு  பிரதமர்  நஜிப்   அப்துல்  ரசாக்    அதிகாரிகளைப்   பணித்துள்ளார்.

“அதிகாரிகள்  உடனடியாக   விரிவான   விசாரணையை   மேற்கொள்ள   வேண்டும்.  கவனக்குறைவு   அல்லது  தவறு  நிகழ்ந்திருந்தால்   நடவடிக்கை   எடுக்கப்படும்”,  என்றவர்   டிவிட்டரில்   தெரிவித்திருந்தார்.

“பெல்டாவையும்   குடியேற்றக்காரர்களையும்  பாதுகாக்க   நடவடிக்கை   எடுக்கப்பட    வேண்டும்”,  என்றும்    அவர்   சொன்னார்.

2015-இல்    “சந்தேகத்துக்குரிய   முறையில்”   நிகழ்ந்த  சொத்துமாற்றத்தால்  கோலாலும்பூர்,  ஜாலான்  செமராக்கில்   உள்ள   ரிம270  மில்லியன்   மதிப்புள்ள    பெல்டா  நிலம்  பறிபோகும்  நிலையில்   இருப்பதாக   நேற்று   அறிவிக்கப்பட்டிருந்தது.

கோலாலும்பூர்  வெர்டிகல்   சிட்டி(கேஎல்விசி)  திட்டத்தின்கீழ்  அந்நிலம்   இப்போது   மேம்படுத்தப்பட்டு   வருகிறது.  அதில்   68-மாடி  “பெல்டா  டவர்”   உள்பட  ஏழு  அடுக்குமாடி  கட்டிடங்கள்  கட்டப்பட்டு   வருகின்றன.

இதனிடையே  நில  உரிமை  மாற்றப்பட்டது  குறித்து   டிசம்பர்  12-இல்   பிரதமர்துறைக்குத்   தெரியப்படுத்தப்பட்டு   போலீசிலும்   புகார்   செய்யப்பட்டிருப்பதாக  பெல்டா  தலைவர்   ஷாரிர்  சமட்   தெரிவித்தார்.

அந்நிலத்தின்   உரிமையாளர்  என்ற இடத்தில்   பெல்டாவின்  பெயர்தான்   இருக்க  வேண்டும்   என்ற  ஷாரிர்,  2014-இல்  கேஎல்விசி   கட்டுநருக்கு    பவர்  பத்திரம்  கொடுக்கப்பட்டது.  அவர்   நிலத்தைத்   தன்  பெயருகே  மாற்றிக்கொண்டிருக்கிறார்  என்றார்.