போலீஸ் காவலில் 16-வது இறப்பு: சுஹாகாம் விசாரணை

மலேசிய    மனித   உரிமை    ஆணையம் (சுஹாகாம்), ஜி.கணேஷ்வரன்   இறப்பு   தொடர்பில்  ஒன்பது  போலீஸ்   அதிகாரிகளையும்   ஒரு   தடுப்புக்காவல்   கைதியையும்   விசாரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை   கணேஷ்வரன்  குடும்பத்தாரையும்   தெங்கு   அம்புவான்   மருத்துவமனை   மருத்துவமனை  அதிகாரியையும்  அது  விசாரிக்கும்   என  சுஹாகாம்   ஆணையர்  ஜெரால்ட்  ஜோசப்    கூறினார்.

நேற்று   அவரைத்   தொடர்பு  கொண்டபோது,  “விசாரணை    தொடக்க  நிலையில்தான்   உள்ளது. இப்போதைக்கு  எந்த  முடிவுக்கும்   வர  இயலாது”,  என்றார்.

கணேஷ்வரன்,29,  கடந்த   வியாழக்கிழமை    போலீசாரால்   தடுத்து  வைக்கப்பட்டார். அவருக்கு  உடல்நலக்  குறைவு   ஏற்பட்டதால்   மருத்துவ  மனைக்குக்  கொண்டு  செல்லப்பட்டார்.    செல்லும்   வழியிலேயே  இறந்து  போனார்.

விசாரணை  அறைக்குக்  கொண்டுவரப்பட்டபோதே  கணேஷ்வரனுக்கு  குமட்டல்,  ஆஸ்த்மா  போன்ற  பிரச்னைகள்   இருந்ததாக   தென்  கிள்ளான்   மாவட்ட  போலீஸ்    கூறியது.

அவரிடம்  வெளிக்காயங்கள்   எதுவுமில்லை   என்பதால்    அவரின்  மரணத்தைச்   சந்தேகிக்க   வேண்டிய   அவசியம்  ஏற்படவில்லை   என்றவர்கள்   தெரிவித்தனர்.

ஆனால்,  கிள்ளான்  எம்பி   சார்ல்ஸ்   சந்தியாகு  கணேஷ்வரனின்  தாயார்   வேறொரு  கதை   சொல்கிறார்   என்றார்.

அவர்(தாயார்)  காவலில்   இருந்த  கணேஷ்வரனைக்  காணச்  சென்றபோது   அவர்  தான்  தாக்கப்பட்டதாகக்  கூறினாராம்.

“கணேஷ்வரன்  வாய்   இரத்தமாக   இருந்தது.  பேசிக்கொண்டிருந்தபோதே  மகன்   மயக்கமடைந்து  விட்டதாக    அவர்   என்னிடம்   தெரிவித்தார்”,  என  சந்தியாகு   கூறினார்.

கணேஷ்வரன்  கிள்ளானைச்   சேர்ந்தவர்.

இதனிடையே,  மனித   உரிமைக்காக  போராடும்     சுவாராம்,    கணேஷ்வரன்  இறப்பைச்   சேர்த்து   இவ்வாண்டில்   மொத்தம்  16பேர்   போலீஸ்    தடுப்புக்காவலில்   இருந்தபோது   இறந்துபோயிருக்கிறார்கள்   எனக் கூறிற்று.