வாங்கும் வசதிக்குட்பட்ட வீடுகளை, இளைஞர்களுக்கு ஏற்பாடு செய்யத் தவறிய பிஎன் அரசாங்கத்தை, எதிர்வரும் பொதுத்தேர்தலில் இளைஞர்கள் தண்டிப்பர் என பிபிபிஎம் இளைஞர் தலைவர் சைட் சட்டிஃ சைட் அப்துல் ரஹ்மான் கூறியுள்ளார்.
அக்குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக, 1மலேசிய மக்கள் வீடு திட்டத்தின் (பிரிமா) விளம்பரங்களில் ‘வசதிக்குட்பட்ட வீடு’ என விளம்பரப்படுத்திய வீடுகளின் விலை அதிகமாக இருந்தது பற்றி, கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் பேசிய கினாபாத்தாங்கான் எம்பி போங் மொக்தாரின் கூற்றை அவர் மேற்கோள்காட்டினார்.
“ஒருசில பிரிமா வீடுகளின் விலை ரிம 250,000-க்கும் அதிகமாக உள்ளது. இது அரசாங்கம் இளைஞர்களின் நலன்களை ஒதுக்கி வைத்துள்ளதையேக் காட்டுகிறது,” என்று அவர் கூறினார்.
மற்ற நாடுகளிலும் சொத்துக்களின் விலை உயர்ந்து வருவதை அவர் ஒப்புக் கொண்டார், ஆனால் அந்நாடுகளில் தொழிலாளர்களின் ஊதியங்களும் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மலேசியாவில் புதிய பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களின் சம்பளம் பொதுவாக மாற்றமடையாமல் இருப்பதுடன், ஏனைய தொழிலாளர்கள், சில ஆண்டுகளாக 17% சம்பள உயர்வை மட்டுமே அனுபவித்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
“சுமார் 50% பட்டதாரிகள் ரிம2,000-க்கும் குறைவான ஊதியம் பெறுகின்றனர். உயர்ந்துவரும் அன்றாட செலவினங்களை எதிர்கொள்ள இது போதாது.”
வீடுகள் பற்றி பேசுகையில், மத்திய அரசாங்கம், நிலைத்தன்மையான சிலாங்கூர் மற்றும் பினாங்கு மாநில அரசுகளின் உதாரணங்களைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
“சிலாங்கூரில், ‘ருமா சிலாங்கூர்கூ’ வீடுகளைக் கட்ட, மாநில அரசு அதற்கு சொந்தமான நிலத்தைப் பயன்படுத்துகிறது, எனவே வீடுகளை ஏற்புடைய விலையில் கட்டுவதற்கு மேம்பாட்டாளர்களைக் கட்டாயப்படுத்தும் உரிமை மாநில அரசுக்கு உள்ளது.
“ஆனால் பிரிமா விசயத்தில், மத்திய அரசாங்கம் விலை கொடுத்து நிலங்களை வாங்க வேண்டியுள்ளது, சில சமயங்களில் அது சந்தை விலையைவிட கூடுதலாகவும் உள்ளது,” என்று அவர் கூறினார்.
சில மேம்பாட்டுத் திட்டங்களில் இலஞ்சம் புகுந்துவிடுவதும், ‘மலிவு விலை’ வீட்டின் விலை அதிகரிக்க காரணமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
“பக்காத்தான் ஹராப்பானின் மாற்று வரவு செலவுத் திட்டத்தை நீங்கள் பார்த்தால், நாம் ஊழலை ஒழித்து, அதன்மூலம் கிடைக்கும் பணத்தில் மலிவுவிலை வீடுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.
“இதன்வழி, அதிகமான இளைஞர்களுக்குச் சொந்த வீடுகளை வழங்க அரசாங்கம் பணம் கொண்டுள்ளது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த மாதம், எர்னெஸ்ட் சோங் எனும் ஒரு சொத்து நிபுணர், சொந்த வீடுகளை வாங்க சிரமப்படும் இளைஞர்கள், தங்கள் பெற்றோர்களுடன் தங்குவதே சிறந்த வழி என்று கூறியதை ஃப்.எம்.தி. மேற்கோளிட்டு, செய்தி வெளியிட்டுள்ளது.