சிலாங்கூரில் பாஸ் கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பலர் விரைவில் கட்சி தாவுவார்கள் என்று கூறப்படுவதை அக்கட்சித் தலைவர் ஒருவர் மறுத்தார்.
அவை “வெறும் வதந்திகள்” என பாஸ் உதவித் தலைவரும் சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினருமான இஸ்கண்டர் சமட் கூறினார். மாநில பாஸின் தேர்தல் ஏற்பாடுகளைக் குலைப்பதற்காகவே அப்படிப்பட்ட வதந்திகள் பரப்பப்படுகின்றன.
“கட்சி உறுப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்துவதும் அவர்களின் கவனத்தைத் திசை மாற்றுவதும் அதன் நோக்கமாகும்”, என்றார்.
பாஸ் தலைவர்கள் பலர் கட்சிமீது அதிருப்தி அடைந்திருப்பதால் கட்சித்தாவ திட்டமிடுகிறார்கள் என்று த மலேசியன் இன்சைட்(டிஎம்ஐ)- டில் இன்று வெளிவந்துள்ள செய்திக்கு அவர் எதிர்வினை ஆற்றினார்.
சில வட்டாரங்களை மேற்கோள்காட்டிய டிஎம்ஐ, பாஸிலிருந்து வெளியேறுவோரை வரவேற்க பிகேஆர் தயாராக இருப்பதாகக் கூறிற்று.
“முதல் அலை” கட்சித்தாவல் 2013-இல் நிகழ்ந்தது. சிலாங்கூர் தலைவர்கள் பலர் பாஸிலிருந்து வெளியேறி அமனா கட்சியை அமைத்தனர்.
“சிலாங்கூரின் 13 சட்டமன்ற உறுப்பினரில் 10 பேருக்கு பாஸ் இப்போது செல்லும் பாதை, குறிப்பாக சிலாங்கூர் தலைமையில் மாற்றம் ஏற்பட்ட பின்னர் அது செல்லும் பாதை மனநிறைவை அளிக்கவில்லை”, என டிஎம்ஐ கூறியது.
ஆனால், இஸ்கண்டர் டிஎம்ஐ செய்தி உண்மை அல்ல என்று மறுத்தார்.
“சிலாங்கூர் பாஸ் கட்சியினர் அவரவர் பொறுப்புகளைத் தொடர்ந்து செய்து வரவேண்டும் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்”, என்றாரவர்.