எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், பாஸ் கட்சியின் சார்பில், 10% முஸ்லிமல்லாத வேட்பாளர்களை நாடாளுமன்ற இடங்களில் போட்டியிட வைக்க உள்ளதாக, பஹாங் பாஸ் ஆணையர் ரொஸ்லி அப்துல் ஜபார் கூறினார்.
வேட்பாளர்கள் பாஸ் ஆதரவாளர்கள் சங்கத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அவர் தெரிவித்தார்.
“அதேசமயம், சட்டமன்ற வேட்பாளர் தேர்வு, சூழ்நிலையைப் பொறுத்து அமையும்,” என்றும் அவர் பஹாங் மாநிலப் பாஸ் கூட்டத்தில் தெரிவித்தார்.
பஹாங் மாநிலப் பாஸ், குறைந்தபட்சம் 38 சட்டமன்றத் தொகுதிகளிலும் 13 நாடாளுமன்ற இடங்களிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“சமூக ஆர்வலர்கள், தொழில் முனைவர்கள் மற்றும் மத குழுவினர் உட்பட பல்வேறு பின்னணியுள்ள வேட்பாளர்களை நாம் அடையாளம் கண்டுள்ளோம். அவர்களில் சுமார் 40% இளைஞர்கள் மற்றும் 10% முஸ்லிம் வேட்பாளர்கள்,” என்று அவர் கூறினார்.
மற்ற எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாதிருந்தாலும், ‘ககாசான் செஜாத்திரா’ கூட்டணியின் கீழ் இயங்கும் சுமார் 200 அரசுசாரா அமைப்புகளின் ஆதரவோடு, மலாய் வாக்காளர்கள் அதிகம் உள்ள இடங்களைக் கைப்பற்ற முடியும் என்று ரொஸ்லி நம்பிக்கை தெரிவித்தார்.
பாஸ் தற்போது, தஞ்ஜுங் லும்பூர் மற்றும் பெசரா சட்டமன்ற தொகுதிகளையும் தெமர்லோ நாடாளுமன்ற தொகுதியையும் கைவசம் வைத்துள்ளது.
கடந்த 13-வது பொதுத் தேர்தலில் வென்ற கோல செமாந்தான் சட்டமன்றத் தொகுதி, அதன் வேட்பாளர் பாஸ் கட்சியிலிருந்து விலகியதால், தற்போது அமானாவின் வசம் உள்ளது.