‘இரத்தத்துடன் மெர்டேக்கா’ –அப்பி இயக்கத்தின் குரல், 71 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒலித்தது

சுதந்திரத்திற்கு முந்தையப் போராட்டத்தின் குரல், கோலாலம்பூர் மாநகரின் தெருக்களில், 71 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் எதிரொலித்தது.

“மெர்டேக்கா! இரத்தத்துடன்!!” என சுமார் 100 இளைஞர்களின் குரல் வீதியெங்கும் ஒலித்தது.

இந்தக் கோசம் தெருவெங்கும் எதிரொலித்த போதும், அந்நிகழ்ச்சி பங்கேற்பாளர்களான ‘ராபாட் உமும் மலேசியா முடா’ இயக்கத்தினர் எந்தவொரு பிரச்சனையையும் இல்லாமல், சுதந்திரத்திற்கு முந்தையக் காலத்தில், செல்வாக்கு மிக்க ஓர் இயக்கமாக விளங்கிய, தேசிய மலாயா மலாய் கட்சியின் (பி.கே.எம்.எம்.) இளைஞர் பிரிவான, ‘அங்காத்தான் பெமுடா இன்சாப்’ (அப்பி) இயக்கத்தின் சுதந்திர அழைப்பை நினைவுபடுத்தவே விரும்பினர்.

சுதந்திரத்திற்கு முன், நீண்டகாலம் தாக்குபிடிக்காத போதும், அந்த இடதுசாரிக் கட்சி, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது மட்டுமின்றி, நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் எப்போதும் ஈர்க்கப்பட்டிருந்தது.

பிப்ரவரி 15, 1946-இல் நிறுவப்பட்ட இக்கட்சிக்கு, பிரித்தானியர்கள்  ஜூலை 17, 1947-இல் தடை விதித்தனர்.

இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான, இஷாக் சூரின், ‘அப்பி’யின் 71-வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு, உரையாற்றினார்.

அவர் தனது உரையில், மக்களுக்கான ஒரு நல்ல தேசத்தை உருவாக்க, அப்பியின் போராட்ட ஆன்மா எப்போதும் உயிரோடு இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

“இந்த வரலாறு நாம் நினைவில் நிறுத்த மட்டுமல்ல, எமது நாடு நியாயமானதாகவும் வளமானதாகவும் உருவாகும் வரை இது தொடர வேண்டும்.

“முன்னாள் போராளிகளின் சுதந்திரப் போராட்டம், துரோகிகள் மற்றும் நாட்டு மக்களை மிதித்து வாழ்பவர்களின் ஏகபோக உரிமையாகிவிட்டதைக் கண்டு நாங்கள் மிகவும் ஏமாற்றமும் கோபமும் அடைந்துள்ளோம்”, என்று பாஸ்சின் முன்னாள் ஆர்வலரும், தற்போது அமானா கட்சியைச் சார்ந்தவருமான அவர் சொன்னார்.

அதேசமயம், அப்பி மற்றும் பி.கே.எம்.எம்.-ன் நிறுவனரான அஹ்மாட் போஸ்தமனின் போராட்டத்தையும் நினைத்து பார்க்கும்படி, வருகையாளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

போஸ்தமன், 1959-ல், சுதந்திரத்திற்குப்பின் நடந்த முதல் பொதுத் தேர்தலில், ஸ்தாப்பாக் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார், ஆனால் வெற்றிபெற்ற சிறிது காலத்திலேயே, 7 ஆண்டுகள் சிறைவாசம் அவருக்கு விதிக்கப்பட்டது.

நாட்டுக்குப் பூக் குளியல் தேவை

சோகோ ஷாப்பிங் சென்டரின் முன்பாக இந்தக் கூட்டம் தொடங்கியது, பின்னர் மாஜூ ஜங்ஷன் நோக்கி அணிவகுப்பு நகர்ந்தது.

1946-ல், அப்பி இயக்கத்தினர் தங்கள் முதல் மாநாட்டில் அணிந்திருந்த சீறுடையைப் பிரதிபலிக்கும் வகையில், பெரும்பாலான பங்கேற்பாளர்கள் வெள்ளை உடையணிந்து, இடது கையில் சிவப்பு துணி கட்டியிருந்தனர்.

டிரம்ஸ்-ஐ அடித்து, பாடிக்கொண்டு, அவர்கள் ரோமன், ஜாவி, தமிழ் மற்றும் சீன மொழிகளில்  எழுதப்பட்ட பதாகைகளையும் சுலோக அட்டைகளையும் தூக்கி, அணிவகுத்து வந்தனர்- அனைத்து மொழியிலும் ஒரே செய்தி – ‘நாட்டிற்காக மக்கள் எழுச்சி பெற வேண்டும்’ என்று வலியுறுத்தும் வாசகங்கள்-மக்கள் எழுச்சிக்கு அழைப்பு விடுவதாக அமைந்திருந்தது.

அந்த ஒரு மணி நேர நிகழ்ச்சியில், இஷாக்கின் உரையோடு, கவிதை வாசிப்பு, மோனோலோக் போன்றவற்றோடு, மலர் குளியலும் இடம்பெற்றது. நாட்டைச் சூழ்ந்துள்ள பிரச்சனைகளைச் சுத்தப்படுத்தும் குறியீடாக, பூக் குளியல் நிகழ்ச்சியின் நிறைவாக அமைந்தது.

அஹ்மட் போஸ்தமனின் போராட்டத்தை நினைவுகூறுவதே நிகழ்ச்சியின் நோக்கம் என்று மலேசியா மூடாவின் செய்தித் தொடர்பாளரான அமீர் அப்துல் ஹடி தெரிவித்தார்.

வருகையாளர்களின் எண்ணிக்கை திருப்திகரமாக இருந்தது என்றும் அவர் சொன்னார்.

“நாங்கள் 50 முதல் 100 பேர் வரை மட்டுமே இலக்கு வைத்திருந்தோம் … ஆனால் இன்றைய வருகையாளர்களின் எண்ணிக்கை, இது ஒரு நல்ல தொடக்கம் எனக் காட்டியுள்ளது.

“அதோடுமட்டுமின்றி, போலிசுடன் எந்தவொரு மோதலும் இல்லாமல், அமைதியான முறையில் நிகழ்ச்சியை முடிக்கவே நாங்கள் விரும்பினோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.

மதியம் சுமார் 1 மணியளவில் இருந்து, சுமார் 20 போலீஸ்காரர்கள் அப்பகுதியில் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்தனர்.