சிங்கப்பூரில் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் எவரும் இல்லை. கடந்த புதன்கிழமை, சிங்கப்பூர், பிரின்செப் தெருவில் இரட்டை மஞ்சள் கோடுகளில் நிறுத்தப்பட்ட்ருந்த சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோபின் மோட்டார் வண்டி கிட்டத்தட்ட “சம்மன்ஸ்” செய்யப்படும் சூழ்நிலையில் சிக்கிக் கொண்டது.
சிங்கப்பூர் தரைப் போக்குவரத்து துறை (எல்டிஎ) அதிகாரி ஒருவர் எஸ்எல்பி1 (சிங்கப்பூர் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர்) என்ற எண் அட்டையுடைய மோட்டார் வண்டியின் ஓட்டுனருடன் பேசிக் கொண்டிருக்கும் படம் சமூக ஊடகத்தில் கடந்த புதன்கிழமையிலிருந்து வலம் வந்து கொண்டிருக்கிறது.
எல்டிஎ அணுகுமுறை விதிகளுக்கு ஏற்ப, அதன் அதிகாரி அந்த மோட்டார் வண்டியின் ஓட்டுனரிடம் அங்கிருந்து செல்லும்படி கூறினார். அந்த ஓட்டுனர் தாம் சிங்கப்பூர் அதிபரை அவரின் மாளிகையிலிருந்து ஏற்றிச் செல்வதற்காகக் காத்திருப்பதாக கூறிக்கொண்டிருக்கும் வேளையில் அதிபர் வந்து சேர்ந்தார். அவரை ஏற்றிக் கொண்டு ஓட்டுனர் சென்று விட்டார். சம்மன்ஸ் ஏதும் அளிக்கப்படவில்லை என்று கூறும் எல்டிஎ மற்றும் சிங்கப்பூர் போலீஸ் அறிக்கையை மேற்கோள்காட்டி சேனல் நியுஏசியா (சிஎன்எ) செய்தி வெளியிட்டுள்ளது.
அதிபர் மற்றும் இதர மூத்த அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் அமைப்பு (எஸ்இசிகோம்) ஆபத்தான நேரங்களில் விரைந்து பாதுகாப்பு அளிப்பதற்காக சம்பந்தப்பட்ட வாகனங்களை எங்கு எப்படி நிறுத்துவது என்று கட்டளை பிறப்பிக்கிறது என்று விளக்கம் அளித்ததாக சிஎன்எ கூறியது.
இக்குறிப்பிட்ட சம்பவத்தில், அதிபரின் மோட்டார் வண்டியை வேறு வசதியான இடம் ஏதும் இல்லாததால் அந்த இரட்டை மன்சள் நிற கோட்டில் நிறுத்துவதற்கான முடிவைத் தளத்திலுள்ள எஸ்இசிகோம் அதிகாரி எடுத்ததாக கூறப்பட்டது.
இந்தச் சம்பவத்தை மீண்டும் பரிசீலித்த போலீஸ் மற்றும் எல்டிஎ அதிகாரிகள் முக்கியமானவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் கடமையில் உறுதியுடன் நடந்தகொள்ள வேண்டிய அதே வேளையில் போக்குவரத்து விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று எஸ்இசிகோம் அதிகாரிகளுக்கு நினைவுறுத்தியதாக சிஎன்எ செய்தி மேலும் கூறுகிறது.
(“Be ye ever so high, still the law is above you”, Thomas Fuller.)