1எம்டிபி சொத்துக்களை சீன நாட்டு நிறுவனங்களுக்கு விற்றதன்வழி கிடைக்கப்பெற்ற பணத்தைக் கொண்டு அபு டாபி அனைத்துலக பெட்ரோலிய முதலீட்டு நிறுவன(ஐபிஐசி)த்துக்கு ஆண்டு இறுதிக்குள் கொடுக்கப்பட வேண்டிய யுஎஸ்$602.7 மில்லியன் கடன் கட்டி முடிக்கப்பட்டதாக சிங்கப்பூர் ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
1எம்டிபி பினாங்கின் வட பகுதியிலும் போர்ட் கிள்ளானிலும் அதற்குச் சொந்தமான இரண்டு நிலங்களை விற்றதாக பல வட்டாரங்களிருந்து தகவல் கிடைத்திருப்பதாக அச்செய்தி கூறிற்று.
“மலேசிய அரசாங்க அதிகாரிகள் சொத்து வாங்கியவர்களை அடையாளம் காண்பிக்க மறுத்தனர் ஆனால், நிலவரங்களை நன்கு அறிந்த நிதியியல் அதிகாரி ஒருவர் 1எம்டிபி சொத்துக்களை வாங்கியவை ‘சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள்தான்’ என்றார்.
“அதற்குமேல் விவரிக்க அவர் விரும்பவில்லை”, என அச்செய்தி கூறியது.
குறிப்பிட்ட அவ்விரண்டு நிலங்களையும் விரிவாக மேம்படுத்த 1எம்டிபி திட்டமிட்டிருந்தது. ஆனால், அதற்குப் பணச் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து அத் திட்டங்கள் கைவிடப்பட்டன.
1எம்டிபி-இல் சீன நிறுவனங்கள் அக்கறை கொள்வதில் வியப்பில்லைதான். ஓராண்டுக்கு முன்பே சீனாவும் மலேசியாவும் 1எம்டிபி எதிர்நோக்கும் பணச்சிக்கலிலிருந்து அதை மீட்டெடுக்க பேச்சுகளில் ஈடுபட்டிருப்பதாக பினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.