லிபியாவின் முன்னாள் தலைவர் கர்ணல் கடாஃபியின் மகன் சய்ஃப் அல்-இஸ்லாம் அந்நாட்டின் தென்மேற்கே உள்ள பாலைவன நகரான உபாரியில் கிளர்ச்சிப் படையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதின் பின்னர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்குப் பேசிய சய்ஃப் அல்-இஸ்லாம் தான் பத்திரமாக இருப்பதாக கூறியுள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள நிழற்படமொன்றில் சய்ஃப் அல்-இஸ்லாமின் கைகளில் காயக்கட்டுக்கள் காணப்படுகின்றன. ஒரு மாதத்துக்கு முன்னர் நேட்டோ வான் தாக்குதலில் சிக்கி இந்தக் காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
அண்டையிலுள்ள நிஜர் நாட்டுக்குத் தப்பிச் செல்ல முயற்சித்தபோது இவர் கைது செய்யப்பட்டதாக லிபியாவின் இடைக்கால நிர்வாகம் கூறியுள்ளது. அவரது சகோதரர்களில் ஒருவர் இப்போது நிஜர் நாட்டில் தஞ்சமடைந்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த செய்தி கேட்டு திரிப்போலியின் வீதிகளில் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.
முன்னாள் லிபியத் தலைவர் கேர்ணல் முவம்மர் கடாஃபிக்குப் பின்னர் அவரது வாரிசாக ஆட்சியைப் பொறுப்பேற்பார் என்று ஒருகாலத்தில் நம்பப்பட்டவர் தான் இந்த சய்ஃப் அல்-இஸ்லாம்.