குறைந்த சம்பளம் போலீஸ் படையினரின் ஊழலுக்குக் காரணம்

போலீஸ்  படையினருக்கு  சம்பளம்  குறைவாக  இருப்பதால்தான்   அவர்கள்   ஊழல்களில்   ஈடுபடுகிறார்கள்,  மற்ற   வழிகளில்   பணம்  ஈட்ட  முயல்கிறார்கள்.     கோலா  லங்காட்   பிகேஆர்   எம்பி   அப்துல்லா  சானி  அப்துல்  ஹமிட்  ஓர்   அறிக்கையில்   இவ்வாறு  கூறினார்.

போலீசாரில்  பலர்  சம்பளத்தில்   40 விழுக்காட்டை   மட்டுமே  வீட்டுக்குக்  கொண்டு  செல்வதாக   புக்கிட்  அமான்  ஒழுங்குக்  கண்காணிப்புத்துறை   இயக்குனர்  அப்துல்  ரகிம்  ஹனாபி    அண்மையில்   கூறியதை    அவர்   மேற்கோள்   காட்டினார்.

பத்தாயிரத்துக்கும்   மேற்பட்ட   போலீசார்- பெரும்பாலும்   30இலிருந்து  35 வயதுக்கிடைப்பட்டவர்கள்,    50இலிருந்து   55வயதுக்கிடைப்பவர்கள்- கடும்  கடன்  பிரச்னைகளில்  சிக்கிக்கொண்டிருப்பதாக   அறிவிக்கப்பட்டுள்ளது.

“10,000  என்பது  பெரிய   எண்ணிக்கைதான். குறைந்த   சம்பளம்   ஒரு  மனிதரை  ஏமாற்றும்  செயல்களில்  ஈடுபடவும்  “கூடுதல்  வருமானம்  தேடும்”  வழிகளை  நாடவும்  காரணமாக  அமைந்து  விடலாம்”,  என  பிகேஆர்  தொழிலாளர் பிரிவுத்  தலைவருமான   அப்துல்லா  சானி   கூறினார்.

எனவே,  அரசாங்கம்   எம்ஏசிசி   பரிந்துரைத்திருப்பதுபோல்,   போலீஸ்  படையினரின்  சம்பளத்தையும்   மற்ற    சட்ட   அமலாக்க   அதிகாரிகளின்  சம்பளத்தையும்  மறுபரிசீலனை   செய்ய   வேண்டும்   என்றவர்   கேட்டுக்கொண்டார்..