ஹரபானின் பிரதமர் வேட்பாளரை அறிவிப்பதில் குழப்பம்

பக்கத்தான்  ஹரபான்   வார இறுதியில்  நடைபெறும்   அதன்  தேசிய  மாநாட்டில்  கட்சியின்  பிரதமர்,  துணைப்  பிரதமர்   வேட்பாளர்களை  அறிவிக்குமா  என்ற  ஐயப்பாடு  தோன்றியுள்ளது.

நேற்றிரவு  ஹரபான்   தலைவர்   மன்றக்  கூட்டத்துக்குப்  பின்னர்   செய்தியாளர்   கூட்டத்தில்  அவ்விவகாரம்  குறித்துக்  கேட்கப்பட்ட   கேள்விகளுக்கு   ஹரபான்   தலைவர்   டாக்டர்  மகாதிர்  முகம்மட்  முன்பின்  முரணாக  பதில்  அளித்ததுதான்   அப்படி  நினைக்க  வைக்கிறது.

திரும்பத்   திரும்ப    அக்கேள்வி   முன்வைக்கப்பட்டபோது,    முதலில்  அறிவிப்பு  மாநாட்டில்    செய்யப்படும்   என்று  கூறிய  மகாதிர்  பின்னர்   மாநாட்டுக்குப்  பின்னர்  தெரிவிக்கப்படும்   என்றார்.

இதனால்  ஏற்பட்ட  குழப்பத்தில்   ஊடகங்களில்  அவ்விவகாரம்   தொடர்பாக  மாறுபட்ட   செய்திகள்   இடம்பெற்றன.

செய்தியாளர்  கூட்டத்தில்  மகாதிரிடம்  கேட்கப்பட்ட   கேள்விகளும்   அவர்  அளித்த  பதில்களும்:

நிருபர்: அடுத்த   பொதுத் தேர்தலுக்கு     பிஎம்(பிரதமர்)   வேட்பாளர்   யார்  என்பது   தெரிந்துவிடும்   என  நேற்றுக்  கூறினீர்கள்.  முடிவு   செய்து  விட்டீர்களா?

மகாதிர்:  மாநாட்டுக்குப்  பின்னர்   அதைத்   தெரிந்து  கொள்வீர்கள்.

நிருபர்:  ஏதாவது  பிரச்னையா? ஹரபான்   அதன்  மாநாட்டில்    துன்(மகாதிர்)னையும்  (பிகேஆர்  தலைவர்  டாக்டர்  வான்)  அசிசாவையும்   அதன்  வேட்பாளர்களாக   அறிவிக்கும்   என்று  முன்பு  தெரிவிக்கப்பட்டிருந்தது.  அதை  அறிவிக்க  முடியாமல்   தடுப்பது  எது?

மகாதிர்:  அதை   அறிவிக்க   இது  சரியான  நேரமல்ல. எங்கள்  எதிர்காலத்  திட்டங்கள்  பற்றி   மாநாட்டுக்குப்  பின்னரே   அறிவிப்போம்.

நிருபர்:  பிஎம்   வேட்பாளர்   தொடர்பில்   இன்று  (தலைவர்  மன்றக்   கூட்டத்தில்)  எதுவும்   முடிவு  செய்யப்பட்டதா?

மகாதிர்: எல்லாம்  மாநாட்டில்தான்.  நான்  ஏற்கனவே  திரும்பத்   திரும்பக்  கூறியிருக்கிறேன்,  இதெல்லாம்   மாநாட்டில்தான்   தெரிவிப்போம்  என்று.

நிருபர்: அப்படி  என்றால்  இன்று  பிஎம்  வேட்பாளர்  குறித்து   எதுவும்  பேசவில்லையா?

மகாதிர்: நாங்கள்  அதை  விவாதித்தோமா   விவாதிக்கவில்லையா  அல்லது  வெறுமனே  ஒருவரை   ஒருவர்    பார்த்து    புன்னகை   செய்து  கொண்டிருந்தோமா   என்பதையெல்லாம்     மாநாட்டில்தான்   கூறுவேன்.

நிருபர்:  அன்வார்  (இப்ராகிம்)  உங்களை   ஆதரிக்கப்போவதில்லை   என்று  கூறியிருக்கிறாராமே?

மகாதிர்:  நீங்கள்  எத்தனையோ  வதந்திகள்   கேள்விப்பட்டிருப்பீர்கள்.  இதையும்  ஒன்றாக   சேர்த்துக்கொள்ளுங்கள்.  உண்மை   என்னவென்பது  மாநாட்டுக்குப்  பின்னர்    தெரிய  வரும்.

நிருபர்:  பிஎம்  வேட்பாளரைத்  தேர்தலுக்கு  முன்னர்  அல்லது  பின்னர்  அறிவிப்பதன்  சாதக,   பாதகங்கள்   என்ன….

மகாதிர்:  தேர்தலுக்குப்  பின்   அறிவிக்க  முடியாது.  அது  மிகவும் கால தாமதம் ஆகி விடும்.  தேர்தலுக்குமுன்புதான்  அறிவிக்க   வேண்டும்.

நிருபர்:  அப்படியானால்,  மாநாட்டுக்குப்  பின்னர்   அறிவிக்கப்படும்.

மகாதிர்:  மாநாட்டுக்கும்   தேர்தலுக்குமிடையில்.

இதைத்  தொடர்ந்து,   மலேசியாகினி   தகவல்  அறிந்த  வட்டாரங்களைத்  தொடர்புகொண்டதில்  பிஎம்  வேட்பாளர்   குறித்து   மாநாட்டில்   அறிவிக்கப்படும்  வாய்ப்பு  அதிகம்  இருப்பது   தெரியவந்தது.

தலைவர்  மன்றக்  கூட்டத்துக்குப்  பின்னர்   வெளியிடப்பட்ட    அறிக்கையும்   மாநாட்டில்  “முக்கிய   அறிவிப்புகள்”   செய்யப்படும்   என்று  குறிப்பிட்டிருப்பதையும்   கவனிக்க   வேண்டும்.