1988 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நீதிமன்றம் சார்ந்த நெருக்கடியின் போது பாதிக்கப்பட்டவர்களிடம் அரசாங்கம்தான் மன்னிப்பு கேட்க வேண்டும், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் அல்ல என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் கருதுகிறார்.
“மன்னிப்பு அன்று ஆட்சியிலிருந்த அரசாங்கத்திடமிருந்து வர வேண்டும். அது ஓர் அரசாங்க நடவடிக்கை, தனிப்பட்ட ஒருவருடையது அல்ல”, என்று ஸைட் மலேசியாகினியிடம் கூறினார்.
இந்நெருக்கடி சம்பவம் மகாதிர் பிரதமராக இருந்த காலத்தில் நடந்ததால் மகாதிர்தான் மன்னிப்பு கோர வேண்டும் என்று பலர் கூறுவது பற்றி கருத்துரைக்குமாறு கேட்ட போது ஸைட் இவ்வாறு கூறினார்.
இந்த விவகாரத்தில் தமக்கு பொறுப்பு ஏதும் இல்லை என்று மகாதிர் தம்மை விடுவித்துக்கொள்வது நியாயமா என்று கேட்டதற்கு, இதற்கு மகாதிர் பொறுப்பேற்றுக் கொண்டாரா இல்லையா என்பது கேள்வி அல்ல, “ஏனென்றால் இதற்கான பொறுப்பு பிஎன் அரசாங்கத்துடையதாகும்” என்று ஸைட் வலியுறுத்தினார்.
மகாதிர், அப்போதைய பேரரசர் சுல்தான் இஸ்கந்தர் சுல்தான் இஸ்மாயில் (ஜொகூர்) மற்றும் முன்னாள் சட்டத்துறை தலைவர் (எஜி) அபு தாலிப் ஓத்மான் ஆகியோர் மீது எவ்விதக் குற்றத்தையும் சுமத்த மறுத்து விட்ட ஸைட், நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றார்.
முன்னாள் அம்னோ அமைச்சரான ஸைட், இந்த நெருக்கடிக்காக பிஎன் அரசாங்கம் மன்னிப்பு கோராது என்கிறார்.
தாம் இந்த மன்னிப்பு கோரும் முன்மொழிதலை செய்த போது அப்போது துணைப் பிரதமராக இருந்த நஜிப் ரசாக் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், இப்போது நஜிப் நீதித்துறையின் மிக்க அன்புக்குரியவராக இருக்கிறார் என்று அவர் கூறினார்.
மன்னிப்பு கோரல் என்பது குறை காண்பதற்காக அல்ல அல்லது யாரையும் குறைகூறுவதற்காக அல்ல. அது ஒரு வேற்றுமை அகற்றி இணக்கம் மற்றும் பணிவு காணும் செயலாகும். அதனால் நாடு முன்னோக்கிச் செல்ல முடியும் என்று ஸைட் மேலும் கூறினார்.
நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டதை மலேசிய நீதித்துறையின் மிக இருண்ட காலம் என்று பலர் வர்ணித்துள்ளனர்.
2008 ஆம் ஆண்டில், ஸைட் இப்ராகிம் சட்டத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் அரசாங்கம் இப்பதவி நீக்க சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நீதிபதிகளிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அப்போதைய பிரதமர் அப்துல்லா அஹமட் படாவி பாதிக்கப்பட்ட ஆறு நீதிபதிகளுக்கும் உதவித் தொகை அளிக்கப்படும் என்று அறிவித்தார். ஆனால், அச்சம்பவத்திற்கு அரசாங்கம் மன்னிப்பு கோராது என்ற நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருந்தார்.