ஹரப்பான் கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை அறிவிப்பதில் அதிகப்படியான அவசரம் வேண்டாம் என்று பிகேஆரின் முன்னாள் துணைத் தலைவர் சைட் ஹூசின் அலி வற்புறுத்துகிறார்.
இந்த விவகாரத்தில் பொதுமக்களிடமிருந்து போதுமான கருத்துகளைப் பெறுவதற்கு போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டும், அது கடைசி நேரம் வரையில் காத்திருக்க வேண்டியிருந்தாலும் சரி என்று அவர் கூறுகிறார்.
“இதை ஒரு பெரும் பிரச்சனையாக்குவதை நிறுத்துங்கள். இதன் முடிவின் மீது அதிக அவசரம் தேவையில்லை.
“மக்களிடமிருந்து பல குரல்களைக் கேட்பதற்கு போதுமான நேரம் கொடுங்கள், நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரையில் கூட”, என்று அவர் கூறுகிறார்.
சைட் ஹூசின் பிகேஆரின் அரசியல் பிரிவுத் தலைவர். அவர் பிகேஆரின் துணைத் தலைவராக 2002 லிருந்து 2010 வரையில் இருந்திருக்கிறார்.
எதிர்க்கட்சிகளை ஒன்றுபடுத்தி ஒரு நியாயமான மற்றும் மேம்பாடடைந்த மலேசியாவை உருவாக்குவதற்காக ஹரப்பான் தோற்றுவிக்கப்பட்டது என்றாரவர்.
இதனை அடைவதற்கு ஹரப்பான் தேவையான சீர்திருத்தங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். இந்த நோக்கங்கள் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வதைவிட மிகப் பெரியவை ஆகும் என்று சைட் ஹூசின் வலியுறுத்தினார்.