இருமொழித் திட்ட ஆதரவாளர் டத்தின் அசிமா மீது போலிஸ் புகார்!

பெட்டாலிங் ஜெயா விவேகனந்தா தமிழ்ப்பள்ளியில் 2017-இல் அமுலாக்கப்பட்ட  இருமொழித் திட்டம் சம்பந்தமாக தொடரப்பட்டுள்ள வழக்கு குறித்து  பத்திரிக்கைச் செய்தி வெளியிட்ட இருமொழித் திட்டம் ஆதரவாளர் டத்தின் அசிமா நூர் ரகிம் மீது போலிஸ் புகார் ஒன்று நேற்று மாலை 6 மணிக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்தப் புகாரை, அந்தப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரியம், அதன் முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் பெற்றோர்கள் பெட்டாலிங் ஜெயா மாவட்ட தலைமைக் காவல் நிலையத்தில் பதிவு செய்தனர்.

இது சார்பகாக பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அக்குழுவினர், அந்தப் புகார் பற்றிய தகவல்களைப் பகிர்ந்தனர்.

“இந்தப் பள்ளியில் மழைக்குகூட ஒதுங்காத ஓர் அந்நிய நபர், அதுவும் தமிழ்ப்பள்ளி நிலைப்பாடு வளர்ச்சியில்  எல்லளவும் அக்கரையற்ற ஒருவர், நமது பள்ளியின் தமிழ்க்கல்வி வழிமுறைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் ஊடகச் செய்திகளை அள்ளிவீசியிருப்பது பலத்த கண்டனத்திற்குறியது” என்கிறார் இக்குழுவின் பேச்சாளர் வழக்கறிஞர் ஆர். பலாமுரளி.

மேலும், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும் தருணத்தில் அது குறித்து அவர் அத்துமீறி பத்திரிக்கைச் செய்தி விட்டிருப்பது நீதிமன்றத்தை அவமதிப்பதாக அமைகிறது என்ற வகையில் இந்த வழக்கை தொடுத்தவர்கள் இந்தப் புகார் செய்துள்ளதாக அவர் கூறினார்.

“விவேகனந்தா பள்ளியில் உள்ள பெரும்பான்மையான பெற்றோர்கள் அந்தப் பள்ளியின் தாய்மொழிக் கல்வி வழிமுறை நிலைத்திருக்க வேண்டும் என்ற வகையில் செயல்பட்டு வருகின்றர்.  அதே வேளையில், ஆங்கில மோகம் கொண்ட ஒரு குறிப்பிட்ட தரப்பினர் இருமொழித் திட்டம் தேவை என்று கேட்கின்றனர். இது சட்ட நுணுக்கம் கொண்ட ஒரு சிக்கலாக உள்ளதால், சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.”

“அசிமா, இதை நாங்கள் அரசியல் ஆக்குகிறோம் என்கிறார், நீதி தேடி வழக்கு போடுவது அரசியலாகுமா?”

“சட்டத்தைப் பின்பற்றி முறையாக வழக்கு பதிவு செய்து நீதி தேடும் இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரியம், அதன் முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் பெற்றோர்கள் மீது காப்புணர்சி உண்டாக்கும் வகையில் பத்திரிகைச் செய்திகளை வெளியிடுபவர்கள், இந்த வழக்கிற்குப் பங்கம் விளைவிக்கின்றனர். அதை அவர்கள் நிறுத்த வேண்டும்”, என்ற வகையில் புகார் செய்யப்பட்டுள்ளது என்ற பாலமுரளி, காவல்துறை இதை விசாரணை செய்ய வேண்டும் என்கிறார்.

29.12.2017 முதல் 2.1.2018 வரை அசிமா அவர்களின் செய்தி ஆங்கிலப் பத்திரிக்கை மற்றும் பிற வலைதளங்களில் பரவலாக வெளியானது. அதில் அவர் பெற்றோர்கள் பள்ளியில் மறியலில் ஈடுபடலாம் என்று கோடிகாட்டியிருந்தார். இவர் Parents Action Group of Education for Malaysia (PAGE) என்ற   மலேசியக் கல்வி பெற்றோர் செயல்பாடு குழுவின் தலைவராவார்.

இது சார்பாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் வா. வி. இராசரத்தினம், பள்ளி வாரியத் தலைவர்  மருத்துவர் செல்வம், முன்னாள் மாணவர் சங்கத்தின் கௌத்தம், வழக்கறிஞர் கா. ஆறுமுகம், இராஜரத்தினம், பாரதிதாசன் மற்றும் சில பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.