டிஏபி இளைஞர் : பிரதமர் வேட்பாளர் பிரச்சினையைப் பேசிப்பேசி மிகைப்படுத்தாதீர்கள்

பிரதமர் வேட்பாளர் பிரச்சினையப் பற்றி விவாதிப்பதை விட்டுவிட்டு, பக்காத்தான் ஹராப்பான் கொள்கையிலும் மக்கள் பிரச்சனைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என டிஏபி இளைஞர் பிரிவைச் சேர்ந்த ஷிர்லீனா அப்துல் ரசிட் கூறியுள்ளார்.

டிஏபி மகளிர் பிரச்சார உதவிச் செயலாளரான அவர்,  மற்ற 15 இளம் அரசியல்வாதிகளுடன் இணைந்து, பிரதமர் வேட்பாளர் பற்றிய பேச்சுவார்த்தைகளைப் புறக்கணித்துவிட்டு, ஆக்கப்பூர்வமான கொள்கை விவாதங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

“காலம் நம் வசம் இல்லை. தற்போது பிரதமர் வேட்பாளர் குறித்து, ‘தேவைக்கும் அதிகமாக’ நாம் பேசிவிட்டோம். இது, பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் பிஎன் அரசாங்கத்தின் ஊழல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகப் பிரச்சினையிலிருந்து மக்களின் கவனத்தை மாற்றியுள்ளது,” என இன்று ஓர் அறிக்கையில் அவர்கள் கூறியுள்ளனர்.

பிகேஆரின் மூத்தத் தலைவர் டாக்டர் சைட் ஹுசேன் அலி, மக்களவைக் கலைக்கப்படும்வரை மக்கள் கருத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், பிரதமர் வேட்பாளர் பற்றிய அவர்களின் கருத்துகளையும் கேட்டறிய வேண்டும் என்று கூறியுள்ளார்.

முன்னாள் பிகேஆர் துணைத் தலைவருமான அவர், “பிரதமர் வேட்பாளர் யார் என்பதை நிர்ணயிப்பதைவிட, ஹராப்பானுக்கு வேறுபல முக்கிய இலக்குகள் இருக்கின்றன. எனவே, இப்பிரச்சினையை மிகைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை,” என்றார்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, ஹராப்பானின் பிரதமர் வேட்பாளர் யார் என்று ஷா ஆலாமில் நடைபெறவுள்ள மாநாட்டில் அறிவிக்கப்படும் என டாக்டர் மகாதீர் நேற்று கூறியிருந்தார்.

முன்னதாக, ஹராப்பான் கூட்டணி கட்சிகள் 3 – டிஏபி, அமானா, பெர்சத்து – அன்வார் இப்ராஹிம் விடுதலை பெற்று, பிரதமர் பதவியில் அமரும்வரை , மகாதீரைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க ஒப்புக்கொண்டன.

ஆனால், பிகேஆர் தனது இறுதி முடிவை தெரிவிக்காததால், இன்னும் அது அறிவிக்கப்படவில்லை. பிகேஆர் அதன் தலைவர் வான் அஸிசாவையே பிரதமர் வேட்பாளராக அறிவிக்க விரும்புகிறது.

டிஏபி இளைஞர் பிரிவினர், தலைமைத்துவத்தின் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்வதாகவும், ஆனால் அது முறையான விவாதங்களுக்குப் பின்னரே முடிவாக வேண்டும் என தாங்கள் விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, இன்னும் ஒரு சில மாதங்களில் வரவுள்ள, 14-ம் பொதுத் தேர்தலின் பிரதமர் வேட்பாளராக, முன்னாள் பிரதமரை அறிவிப்பதைத் தவிர, ஹராப்பானுக்கு வேறு வழியில்லை என பெர்சத்து தலைவர் முஹிடின் யாசின் தெரிவித்துள்ளார்.