முன்னாள் பகுதிநேர உபர் ஓட்டுநர் லாம் சாங் நாம்,31, பாதிரியார் ரேய்மண்ட் கோவைக் கடத்தியதாக இன்று பெட்டாலிங் ஜெயா மெஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
லாம், இன்னும் தலைமறைவாக இருக்கும் எழுவருடன் சேர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி 13, காலை மணி 10.25 அளவில் அக்குற்றத்தைப் புரிந்தார் எனக் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் லாமுக்கு ஏழாண்டுச் சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
லாம், கடந்த மார்ச்சில் கோவை விடுவிக்க அவரின் குடும்பத்தாரிடம் ரிம30,000 பிணைப்பணம் கோரினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டார்.
கோ மற்றும் மூவர் காணமல்போனது மீதான சுஹாகாமின் பொது விசாரணை தீவிரமடைந்து வரும் வேளையில் லாம்மீது கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் இப்போது நீதிமன்றம் சென்றிருப்பதால் சுஹாகாம் அதன்மீது இனி விசாரணையைத் தொடர முடியாது. நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள்மீது சுஹாகாம் பொது விசாரணை நடத்துவதை 1999 மனித உரிமைச் சட்டம் தடுக்கிறது.
கோ வழக்கு தொடர்பாக போலீசார் குறைவான தகவல்களை வெளியிட்டு வந்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் கெடா, கம்போங் வெங் டாலாம்-இல் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் அங்கு பாதிரியார் கோவின் எஸ்டி 5515 டி என்னும் எண்பலகை கொண்ட கார் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் அறிவித்தனர். அவ்வழக்கு தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர் கோவின் கடத்தலில் தென் தாய்லாந்து கும்பலொன்று சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டதைத் தவிர வேறு எந்தத் தகவலும் இல்லை.
கோ பட்டப்பகலில் பலரும் பார்க்க ஒரு கும்பலால் கடத்தப்பட்டார். சுஹாகாம் பொது விசாரணையில் சாட்சிமளித்த போலீஸ்காரர் ஒருவர், அது ஒரு “போலீஸ் நடவடிக்கை”யை ஒத்திருந்தது என்றார்.