பக்கத்தான் ஹரபான் பிரதமர், துணைப் பிரதமர் வேட்பாளர்களான டாக்டர் மகாதிர் முகம்மட்டும் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலும் அடுத்த மாதம் தொடங்கி நாடு முழுக்கச் சுற்றுப்பயணம் செய்வர்.
மகாதிர், 93, வாரத்துக்கு ஓர் இடத்தில் விளக்கக் கூட்டங்கள் நடக்கும் என்றார்.
“தேர்தல் மே மாதம் நடக்கும் என்று அனுமானித்தால் இடையில் 14 வாரங்கள்தான் இருக்கும்”, என முன்னாள் பிரதமர் இன்று பிற்பகல் பெட்டாலிங் ஜெயாவில் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
அந்த விளக்கக்கூட்டங்களில் பக்கத்தான் ஹரபான் தலைவர்கள் கலந்துகொண்டு மக்களை நேரடியாக சென்று கண்டு கூட்டணியின் கொள்கைகளை விளக்குவார்கள், ஆளும் பிஎன் அரசாங்கம் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவிப்பார்கள்.
சுற்றுப்பயணம் பக்கத்தான் ஹரபான் பெயரில்தான் நடக்கும், ஆனால் தேர்தலில் பக்கத்தான் அடையாளச் சின்னத்தில் அந்தக் கூட்டணி போட்டிடுமா என்பது சந்தேகமே.
சங்கப் பதிவகத்திடமிருந்து இன்னும் அக்கூட்டணிக்கு முறையான அங்கீகாரம் கிடைக்கவில்லை என மகாதிர் கூறினார்.
“பெர்சத்துவிலும் டிஏபியிலும் பிரச்னை என்கிறார்கள். நாங்கள் சரிசெய்ய முயன்றோம். ஆனால், இதுவரை பதில் இல்லை”, என்றாரவர்.