தானா மெலாயு- வைக் (மலாயா) காப்பாற்ற, மலாய்க்காரர்கள் மட்டும்தான் உயிரைப் பணயம் வைத்து போராடினார்கள், என்று கூறியுள்ள உம்மா இயக்கத்தின் தலைவர் இஸ்மாயில் மினா அஹ்மாட்டின் கூற்றை, துணைப் பிரதமர் ஷாஹிட் ஹமிடி மறுத்துள்ளார்.
வரலாற்று ஆசிரியர், கூ கேய் கிம் கூற்றுப்படி, இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர்களையும் அவசரகால பிரகடனத்தின் போது கம்யூனிஸ்ட்டுகளையும் எதிர்த்துப் போரிட பல்லினங்களும் பங்காற்றியுள்ளதை ஷாஹிட் குறிப்பிட்டார்.
“இந்த விஷயத்தில், நாட்டுக்காக ஒரே ஓர் இனம்தான் போராடியது என்று சொல்வது சரியல்ல.
“நம் நாட்டு மக்கள் பல்லினத்தைச் சேர்ந்தவர்கள், நம் நாட்டை அழிக்க வெளிநாட்டினர் முயல்கின்றபோது, நாம் மலேசியர்களாக அல்லது அன்று மலாயர்களாக (மலாயா) ஒன்றிணைந்தே போராடி வந்துள்ளோம்.
“இந்த விஷயத்தில், முரண்பாடான விவாதத்தை ஏற்படுத்த தேவையில்லை, காரணம் அனைத்து தரப்பினரும் நாட்டிற்காக பங்களித்துள்ளனர்,” என்று, இன்று ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது அவர் சொன்னார்.
முன்னதாக, கடந்த ஜனவரி 13-ல், கோலாலம்பூரில் நடந்த உம்மா எழுச்சி மாநாட்டில் பேசிய இஸ்மையில் மினா, மலாய்க்காரர்கள் ‘திகா பிந்தாங்’ இயக்கத்தினரால் கொல்லப்பட்டதை நினைவு கூர்ந்ததோடு; அந்த வரலாற்று சம்பவத்தை மலாய்க்காரர்கள் மறக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.
அதன் அடிப்படையில், மலாய்க்காரர் அல்லாதவர்கள் நாட்டின் பிரதமர் பதவியைக் கோருவது சரியானதா, என்று அவர் கேள்வி எழுப்பினார்.