தேர்தல் ஆணையம் : 3.6 மில்லியன் மலேசியர்கள் இன்னும் வாக்காளர்களாகப் பதியவில்லை

கடந்தாண்டு செப்டம்பர் வரை, 21 வயதிக்கு மேற்பட்ட 3.6 மில்லியன் மலேசியர்கள் தங்களை இன்னும் வாக்காளர்களாகப் பதிந்துகொள்ளவில்லை என்று, தேர்தல் ஆணையத்தின் செயலாளர் அப்துல் கானி சாலே தெரிவித்துள்ளார்.

2017-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு வரை, 14.8 மில்லியன் மலேசியர்கள் மட்டுமே தேர்தல் வாக்காளர் பட்டியலில் உள்ளனர்.

“கடந்தாண்டின் நான்காம் காலாண்டில், தேர்தல் ஆணையம் 212,042 புதிய வாக்காளர்கள் பதிவையும் 72,998 மாற்றிட முகவரி விண்ணப்பங்களையும் பெற்றது,” என்று புத்ராஜெயாவில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

4/2017  காலாண்டின் கூடுதல் தேர்தல் பட்டியல் (டிபிதி), நாளை முதல் 14 நாட்களுக்கு, நாடு முழுவதிலும் 961 இடங்களில் பார்வைக்கு வைக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

இக்காலகட்டத்தில், கடந்தாண்டு அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பரில் புதிதாகப் பதிந்தவர்களும் முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பித்தவர்களும், தங்கள் பதிவைச் சரிபார்த்து கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

புதிதாகப் பதிந்தவர்களின் பெயர் பட்டியலில் விடுபட்டிருந்தால், அவர்கள் ‘பாரம் பி’-ஐ (போராங் பி) பூர்த்தி செய்து, வேலை நாள்களில் அலுவலக நேரத்தின்போது, பதிவாளரிடம் (மாநிலத் தேர்தல் இயக்குநர்) சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

விண்ணப்பத்தாரர்கள், www.spr.gov.my என்ற இணையத்தளத்தில் அல்லது ‘மை எஸ்பிஆர் சேமாக்’ ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் வழியாக, பெயர் பட்டியலைச் சரிபார்க்க முடியும் என்று அவர் மேலும் கூறினார்.

மேல் விவரங்களுக்கு, 03-88927018 என்ற தொலைபேசி எண்களில் தேர்தல் ஆணையத் தலைமையகத்தையோ அல்லது மற்ற மாநிலத் தேர்தல் அலுவலகங்களையோ தொடர்பு கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.

-பெர்னாமா