பட்டதாரிகள் நாசி லெமாக் விற்பதைக் கண்டு வெட்கப்படுவதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார்.
“பட்டதாரிகள் உபர் கார் ஓட்டுநர்களாகவும் நாசி லெமாக் விற்பனையாளர்களாகவும் இருப்பதை நினைத்துப் பெருமை கொள்ள முடியாது. வருமானத்துக்காக அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள்.
“அவர்கள் (பல்கலைக்கழத்தில்) படித்தவர்கள். அந்த அறிவாற்றலையும் திறமையையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால், வேலை கிடைக்கவில்லை என்பதால் நாசி லெமாக் விற்கிறார்கள்”. முகநூலில் பதிவிடப்படும் அவரது “வாராந்திர கொள்கை உரை”யில் மகாதிர் இவ்வாறு கூறினார்.
அவரது இவ்வாரத்திய உரை இளைஞர்களின் வேலை, கல்வி மீது கவனம் செலுத்தியது.
பட்டதாரிகளை உருவாக்குவது நாசி லெமாக் விற்பதற்குத்தான் என்றால் பல்கலைக்கழகங்கள் அதற்கான பயிற்சிகளையே வழங்கலாமே என்று மகாதிர் குறிப்பிட்டார்.
“ஆனால் அப்படிப்பட்ட பல்கலைக்கழகம் எதுவும் நம்மிடம் இல்லை . பட்டதாரிகள் நாசி லெமாக் விற்பது வெட்கக்கேடான விசயம்.
“அது, அறிவாற்றலுக்கு இணையான வேலை வாய்ப்புகளை உருவாக்க அரசாங்கம் தவறிவிட்டது என்பதைக் காண்பிக்கிறது”, என பெர்சத்து மற்றும் ஹரபான் தலைவர் குறிப்பிட்டார்.
அண்மைய ஆண்டுகளில் கல்விக்கான பட்ஜெட் தொடர்ந்து குறைக்கப்பட்டு வந்துள்ளதை மகாதிர் சுட்டிக்காட்டினார்.
ஹரபான் ஆட்சிக்கு வந்தால் அது கல்விக்குக் கூடுதலாகச் செலவிடும் என்றாரவர்.