பிஎஸ்எம் : சர்வதேச சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் பொது சுகாதாரத் துறையை அழிக்கும்

சர்வதேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கையெழுத்திடுவது, பொது சுகாதாரத் துறைக்குப் பாதிப்பைத் தரும் என்று மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) எச்சரித்துள்ளது.

விரிவான பொருளாதாரக் கூட்டு மண்டலத்தில் (ஆர்சிஇபி), மலேசியா ஆர்வம் கொண்டுள்ளதைப் பற்றி, டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார் தேவராஜ், “அத்தகைய ஒப்பந்தங்கள் பொது சுகாதார வசதிகளுக்குப் பேரழிவை ஏற்படுத்தும்,” என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே, நிபுணத்துவ மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்குப் படையெடுப்பதால் மோசமடைந்து வரும் அரசு மருத்துவமனைகள், இந்த பொருளாதார ஒப்பந்தத்தால் இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளப்படும் என்றார் அவர்.

“அதிக சம்பளம் கிடைப்பதால், நிபுணத்துவ மருத்துவர்களும் தாதிகளும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுவதையே விரும்புவர், இதனால் அரசாங்க மருத்துவமனைகள் சிறந்த சேவையை வழங்க இயலாது.

“இதனால்தான், தனியார் மருத்துவமனைகளை முடக்கச் சொல்லி பிஎஸ்எம் வலியுறுத்தி வருகிறது. தனியார் மருத்துவமனைகள் அதிகரித்து வருவதால், அரசாங்கம் அதிகமான மருத்துவ ஊழியர்களை இழக்க நேரிடும்.

“இப்போதே ஒரு மருத்துவ நிபுணரைச் சந்திக்க, நோயாளிகள் அதிக நேரம் காக்க வேண்டியுள்ளது,” என்று சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

கடந்த புதன்கிழமை, பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் நன்மையளிக்கும், சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை எதிர்க்கும் வகையில், பிஎஸ்எம் ‘மக்கள் சாசனம்’ ஒன்றை முன்வைத்தது.

கடந்தாண்டு, டோனல்ட் திராம்ப் திபிபிஏ-ஐ இரத்து செய்தபின், அதற்கு மாற்றாக ஆர்சிஇபி-ஐ புத்ராஜெயா ஏற்க விரும்புகிறது.

ஆசியான் தலைமையிலான ஆர்சிஇபி, ஆசியாவிலும் ஓசியானியாவிலும் 16 பொருளாதாரங்களை ஒருங்கிணைக்க இலக்கு கொண்டுள்ளது.

இதன்வழி, வெளிநாட்டு நிறுவனங்கள், புதிய காப்புறுதிகள் மற்றும் பதிப்புரைகளுடன் அதிகமான தனியார் மருத்துவமனைகளை இங்கு திறக்க வாய்ப்புள்ளது என்றார் டாக்டர் ஜெயக்குமார்.

“நம்மால் அவர்களைத் தடுக்க இயலாது, நாம் முடியாது என்றால், முதலீட்டாளர்களின் உரிமையை நாம் தடுப்பதாக அதற்கு அர்த்தம். மேலும், வெளிநாட்டு நிபுணத்துவ மருத்துவர்கள் இங்கு வருவார்கள், அதோடு மட்டுமின்றி, அதிக சம்பளம் கொடுத்து அரசு நிபுணத்துவ மருத்துவர்களையும் அவர்கள் எடுத்துகொள்வர்,” என்று அவர் சொன்னார்.

அண்மையில், தனியார் மற்றும் அரசாங்க மருத்துவமனைகளுக்கு இடையேயான சம்பள வித்தியாசத்தால், அதிகமான நிபுணத்துவ மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளை விட்டுச் செல்வது ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கூறியுள்ளார்.