நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேஷன் (என்.ஃப்.சி.) ஊழலில் பாதிக்கப்பட்டது ரஃபிசி அல்ல என்ற அம்னோ மகளிர் தலைவர் ஷரிசாட்டின் கூற்றை, பிகேஆர் உதவித் தலைவர் ரஃபிசி ரம்லி ஒப்புக்கொண்டார்.
“அவர் (ஷரிசாட்) சொல்வது உண்மைதான் என்று நான் நினைக்கிறேன்.”
“வேடிக்கையாக இருக்கலாம், ஆனால் உண்மையாக் பாதிக்கப்பட்டது அந்த மாடுகள்தான், அவை குறிப்பிட்ட காலத்திற்குக் கொடுமைக்கு ஆளாகின,” என்று ரஃபிசி மலேசியாகினி சந்திப்பின்போது தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் இருந்து, நெகிரி செம்பிலான், கெமாஸ் வரும்வழியில் பல மாடுகள் செத்துபோயின; முறையான தீவனம் (புற்கள்) கொடுக்கப்படாததால், பெரும்பான்மையான மாடுகள் இளைத்துப் போயின என்று ரஃபிசி தெரிவித்தார்.
அம்மாடுகளுக்கு ஏற்ற புல் வகைகள் கொடுக்கப்படாததால்தான் பிரச்சனை உருவானது என்றும் அதற்கான ஆதாராம் தன்னிடம் உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
மீதமுள்ள பசுக்கள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக எடை இழந்துள்ளன என்றார் அவர்.
“நீங்கள் கெமாஸ் சென்று அப்பசுக்களைப் பார்த்தீர்கள் என்றால், அவை ஊட்டச்சத்து குறைவால், இளைத்துபோய், ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட கொழுத்த மாடுகள் போல் இருக்காது,” என்று அவர் கூறினார்.
அம்மாடுகளைத் தவிர்த்து, வரிப்பணம் செலுத்திய, என்.ஃப்.சி.-க்காக RM250 மில்லியன் செலுத்திய மலேசிய மக்கள் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள்.
ஏழை கால்நடை வளர்ப்பாளர்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்
இத்திட்டத்தால் உண்மையில் அதிகம் பாதிக்கப்பட்டது, ஏழை கால்நடை வளர்ப்பாளர்களும் விவசாயிகளும்தான் என்று ரஃபிசி உறுதியாகக் கூறினார்.
வேறுபல திட்டங்களால், நாட்டில் மாட்டிறைச்சி உற்பத்தியை நிலைபடுத்தி இருக்க முடியும், நல்ல பலனையும் கொண்டுவந்திருக்க முடியுமென அவர் சொன்னார்.
“அரசாங்கம் ரிம 250 மில்லியனை ஷரிசாட்டிடம் கொடுத்து, மாடுகள் வளர்ப்பை அதிகரிக்கச் சொன்னதற்குப் பதில், ரிம 10,000 ஒவ்வொரு கால்நடை வளர்ப்பாளரிடமும் கொடுத்திருக்கலாம்.”
2006-ஆம் ஆண்டு, முதன்முதலாக என்.ஃப்.சி. நிறுவப்பட்ட போது, மலேசியாவில் குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவு மக்களின் நிலைமை மோசமடைந்து இருந்தது என்று ரஃபிசி நினைவுறுத்தினார்.
“ஆக, அந்த ரிம 250 மில்லியனை, 2006-ல் என்.ஃப்.சி.-க்குக் கொடுக்காமல், இவர்களுக்கு (கால்நடை வளர்ப்பாளர்கள்) பிரித்து கொடுத்திருந்தால், இந்நேரம் அவர்கள் தங்கள் வாழ்க்கை தரத்தை சற்று உயர்த்தி இருக்க முடியும்.
“ஆக, ஷரிசாட் நேரம் ஒதுக்கி, இவர்களைச் சந்தித்துப் பேசி, நடந்தவற்றை சிந்தித்துப் பார்க்க வேண்டும்,” என்று ரஃபிசி ரம்லி சொன்னார்.