இராகவன் கருப்பையா – இந்நாட்டிலுள்ள அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநலப் பசிக்கு எப்படியெல்லாம் பொதுமக்களை இரையாக்கிக் கொள்கின்றனர் என்று நினைத்துப் பார்த்தால் நமக்கு வேதனையும் விரக்தியும் கலந்த கோபம்தான் வரும்.
‘கொட்டக் கொட்டக் குனிபவன் இருக்கும் வரையில் கொட்டுபவன் கொட்டிக் கொண்டுதான் இருப்பான்,’ எனும் உவமைக்கு ஏற்ப, மக்கள் விழிப்படையாத வரையில் இந்த அவல நிலைக்கு முடிவு பிறக்க வாய்ப்பில்லை.
முன்னாள் பிரதமர் நஜிப் ‘உலகமகாத் திருடன்’ என அமெரிக்க சட்டத்துறை அலுவலகமும் மேலும் பல நாடுகளும் தீவிர விசாரணைக்குப் பின் உறுதிப்படுத்தின. ‘கொள்ளைக்கார முட்டாள்’ என ஆஸ்திரேலியாவின் முன்னணி ஊடகம் ஒன்று கூட அவரை வருணித்தது.
நம் நாட்டில் கூட, “2.6 பில்லியனைத் திருப்பிக் கொடு,” “2.6 பில்லியன் எங்கே,” என்றெல்லாம் பல்கலைக்கழக மாணவர்கள் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை பல்வேறுத் தரப்பினர் வெவ்வேறுத் தருணங்களில் பதாகைகளை ஏந்தி தங்களுடைய அதிருப்தியைத் தெரிவித்தக் காட்சிகள் நம நினைவுகளை விட்டு இன்னும் அகலவில்லை.
அந்த சமயத்தில் பி.கே.ஆர். மற்றும் பாஸ் கட்சி உள்பட பல அரசு சாரா நிறுவனங்களும் கூட இவ்விவகாரத்தை கையிலெடுத்து நஜிபுக்கு எதிராக உக்கிரமாகப் பிரச்சாரம் செய்து அவருடைய ஆட்சியைக் கவிழ்க்க வகை செய்தது நமக்குத் தெரியும்.
அதனைத் தொடர்ந்து நாட்டின் எல்லா நிலைகளில் உள்ள நீதிமன்றங்களும் நஜிப் குற்றவாளிதான் என உறுதிப்படுத்தி அவரை சிறையிலடைத்த போது வெகுசன மக்கள் ஆனந்தமடைந்தனர்.
ஆனால் இப்போது நடப்பது என்ன? ‘நஜிப் அநியாயமாக வஞ்சிக்கப்பட்டுள்ளார்.’ ‘அவருக்கு நீதி வழங்கப்படவில்லை,’ என்றெல்லாம் அதே அரசியல் கும்பல் தங்களுடைய சுயநலத்திற்காக தற்போது ‘மேகா’ நாடகமொன்றை அரங்கேற்றுகிறது.
தங்களுடைய சுயநல வேட்கைக்கு அந்த அரசியல்வாதிகள் மக்களை பலிகடாவாக்குவதுதான் மிகவும் வேதனையான விஷயம்.
நஜிப் கைது செய்யப்பட்ட போதும் பிறகு இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்ட போதும் நீதித்துறையை பாராட்டிய பிரதமர் அன்வார் கூட தற்போது திடீர் பல்டியடித்துள்ளது நமக்கு ஆச்சரியமாக உள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டில் 2ஆவது தடவையாக நாட்டின் தலைமைப் பொறுப்பேற்ற முன்னாள் பிரதமர் மகாதீர், தனிப்பட்ட விரோதத்தின் பேரில் நஜிப்பை வஞ்சித்துவிட்டார் என்றும் முறையான விசாரணை நடத்தப்படவில்லை எனவும் அன்வார் செய்த அறிவிப்பு யாரும் எதிர்பாராத ஒன்று என்றே சொல்ல வேண்டும்.
தனக்கு வீட்டுக் காவல் வேண்டும் என நஜிப் செய்துள்ள மேல் முறையீடு எதிர்வரும் திங்கள்கிழமை 6ஆம் தேதி விசாரணக்கு வரவிருக்கும் பட்சத்தில் அவருக்கு ஆதரவான அரசியல்வாதிகள் 200க்கும் மேற்பட்ட பேருந்துகளில் மக்களைத் திரட்டிக்கொண்டு தலைநகரை நோக்கி வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதரவு பேரணி எனும் பெயரில் நீதிமன்ற வளாகத்தில் இந்த ‘டிராமா’ அரங்கேறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
பாஸ் கட்சியும் அம்னோவும் இந்தப் பேரணியில் கைக்கோர்த்துள்ளதுதான் மிகவும் வியக்கத்தக்க ஒரு விஷயம். ம.இ.கா.வும் இப்பேரணியில் கலந்துகொள்ளும் என அதன் துணைத் தலைவர் சரவணன் செய்த அறிவிப்பையும் சிலர் கேலியாகத்தான் பார்க்கின்றனர்.
இவ்வளவு நாள்களாக நஜிபயும் அம்னோவையும் அரசியல் விரோதிகளாக வசைபாடி வந்த பாஸ் கட்சியின் போக்கு, ‘ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத’க் கதையாகத்தான் உள்ளது.
இத்தகைய ஒரு பேரணி நீதிபதியின் தீர்ப்பில் எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொதுமக்கள் சிந்திக்க வேண்டும். கூட்டம் பெரிதாக இருந்தால் நீதிபதி தமதுத் தீர்ப்பை மாற்றி எழுதுவாரா என்ன?
இதற்கிடையே இந்த நீதிமன்ற விசாரணை நம் நாட்டில் மூன்னுதாரணம் இல்லாத ஒன்றாகும். ஏனெனில் மன்னிப்பு வாரியத்தின் முடிவு தொடர்பான ஒரு விஷயத்தைதான் நஜிப் நீதிமன்றம் வரையில் இழுத்துக் கொண்டு வந்துள்ளார்.
மன்னிப்பு வாரியத்தின் முடிவு குறித்து அவ்வாரியம் மட்டுமே பரிசீலனை செய்ய வேண்டுமேத் தவிர வேறு யாருமில்லை என கடந்த வாரம் பேரரசர் உத்தரவிட்டுள்ளதாக சட்டத்துறை அலுவலகம் செய்துள்ள அறிவிப்பையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்த அறிவிப்பின் தாக்கம் அரசியல்வாதிகளுக்கும் தெரியாமல் இல்லை. இருந்த போதிலும் அப்பாவி மக்களைத் திரட்டி தங்களுடையத் தேவைகளை அவர்கள் நிறைவேற்றிக் கொள்கின்றனர் என்பதுதான் வேதனைக்குரிய நிதர்சனம்!