வாழ்க்கைச் செலவின உயர்வால் வாக்காளர்கள் ஹரப்பான் பக்கம் வருவர்: முகைதின்

வாழ்க்கைச்  செலவின உயர்வு       தேர்தலில்    எதிரணிக்கு   ஆதரவாக  மாறப்போகிறது     என்கிறார்  பெர்சத்துத்   தலைவர்   முகைதின்  யாசின்.

கடந்த   ஈராண்டுகளாக   பக்கத்தான்  ஹரப்பான்  மேற்கொண்ட   ஆய்வுகள்,      மக்களைச்   சந்திக்கையில்   கிடைத்த   பின்னூட்டங்கள்   ஆகியவற்றின்   அடிப்படையில்   அவர்   இவ்வாறு    கூறினார்.

”வாழ்க்கைச்  செலவினம்  உயர   வேண்டும்      என்பது  எங்கள்  விருப்பம்   அல்ல   ஆனால்,  நாட்டில்  இதுதான்   நடக்கிறது.  2016,  20117இல்  நடத்தப்பட்ட    ஆய்வுகள்   அதைக்  காண்பிக்கின்றன.

“மக்கள்   எதிர்நோக்கும்  ஒரு  முக்கியமான   பிரச்னை  வாழ்க்கைச்  செலவின  உயர்வும்  பொருள்,  சேவை   வரியும்(ஜிஎஸ்டி)   என்பதற்கு  ஆதாரம்  உண்டு”,  என்றார்  முகைதின்.

“இப்பிரச்னையை    அரசாங்கம்   உணர்ந்திருக்க    வேண்டும்   ஆனால்,  அவப்பேறாக  அதைக்  களைவதற்கு  பிஎன்   அதிகம்  செய்வதில்லை.  உதவித்  தொகைகளை   அது  மறந்து  விட்டது,  ஜிஎஸ்டிதான்    எல்லாவற்றுக்கும்  காரணமாக  இருப்பதை    அது  மறந்து  விட்டது”,  என  இன்று  காலை   கோலாலும்பூரில்  பசார்  டத்தோ  கிராமாட்டைச்  சுற்றி  வந்த   பின்னர்  செய்தியாளர்களிடம்   கூறினார்.

பொருள்களின்  விலை  உயர்ந்து   மக்கள்   பாதிக்கப்படாமலிருப்பதை   உறுதிப்படுத்த   அரசாங்கம்   எந்த  முயற்சியும்   செய்வதாகத்     தெரியவில்லை  என்றார்.  இருபதாண்டுகளுக்கு  முன்   தாம்   உள்நாட்டு  வாணிக,  பயனீட்டாளர்   விவகார  அமைச்சராக  இருந்தபோது  விலைகள்  உயராமல்   கண்காணித்து   வந்ததாக  சொன்னார்.

”வாரந்  தோறும்  களத்தில்  இறங்கிப்   பொருள்  விலைகளைக்  கண்காணிப்பேன்”,  என்றார்.

அண்மையில்  மக்களைச்    சந்தித்துப்  பேசியதில்    அனைவரும்  அரசாங்கத்தை  மாற்றும்     நேரம்  வந்து  விட்டதாக  தம்மிடம்    கூறினார்கள்   என்றும்   முகைதின்   தெரிவித்தார்.